ஹட்டன் நகரில் அரசாங்க நிதி நிறுவனம் ஒன்றில் தற்காலிக பணியாளராக பணிபுரியும் யுவதியொருவர் புத்தரின் உருவப்படத்துடனான சேலையை அணிந்து வந்தமைத் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் குறித்த சேலையை தமது பொறுப்பின் கீழ் இன்று கொண்டு வந்தனர்.
பல்கலைக்கழக அனுமதிக்காக காத்திருக்கும் குறித்த யுவதி அனுமதி கிடைக்கும் வரை தற்காலிகமாக இந்த நிதி நிறுவனத்தில் பணிபுரிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 7ஆம் திகதி ஹட்டன் நகரிலுள்ள ஒரு வர்த்தக நிலையத்திலிருந்து இந்த சேலையை 1500 ரூபாய்க்கு கொள்வனவு செய்ததாகவும் யுவதியிடம் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போது, இந்த சேலை இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டதாகவும், இதேப்போன்ற வேறு சேலைகளை இதுவரை விற்கவில்லை என்றும் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.