விடுதலைப் புலிகள் அமைப்பால் பதுக்கப்பட்டுள்ளன என்று நம்பப்படும் ஆயுதங்களைத் தேடும் நடவடிக்கைகளை வன்னியின் பல பகுதியிலும் படைத் தரப்புகள் முடுக்கி விட்டுள்ளன. நேற்று வவுனியாவிலும் ஆயுதங்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் கடற்படையினர் ஈடுபட்டனர்.
கூமாங்குளம், நூலக வீதியில் உள்ள சின்னம்மன் ஆலயத்துக்கு முன்பாக உள்ள தனியார் காணியில் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. கடற்படையினரின் கொழும்பு அலுவலகத்துக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமையேவே இந்தத் தேடுதல் நடத்தப்பட்டது என்று கூறப்படுகின்றது. அநுராதபுரம் பூனாவ கடற்படை முகாமைச் சேர்ந்தவர்களே தேடுதலில் ஈடுபட்டனர்.
நேற்றுக் காலை நீதிமன்ற அனுமதி பெற்று இந்தத் தேடுதல் நடத்தப்பட்டது. அடையாளப்படுத்தப்பட்ட பகுதியில் நேற்று மாலை வரை அகழ்வுப் பணிகள் நடைபெற்றன. சுமார் 10 அடி ஆழம்வரை அகழப்பட்டபோதும் எதுவும் கிடைக்கவில்லை. காணியின் ஏனைய பகுதிகளையும் அகழ்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
அகழ்வுப் பணிகள் நடந்த பகுதிக்கு வவுனியா பொலிஸார் பாதுகாப்பு வழங்கினர். செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க அனுமதிக்கப்படவில்லை. திடீரென முன்னெடுக்கப்பட்ட செயற்பாட்டால் அந்தப் பகுதி மக்கள் பதற்றமடைந்திருந்தனர்.