எட்டாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு நேற்றுப் பிற்பகல் வைபவ ரீதியாக ஆரம்பமானது. அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் கொள்கை விளக்கவுரையும் நடைபெற்றது.
ஏப்ரல் மாதத்தின் இரண்டாவது நாடாளுமன்றக் கூட்டத்தொரை சிறப்பு அரசிதழ் அறிவித்தல் மூலம் அரச தலைவர் முடக்கியிருந்தார். அந்தக் கூட்டத்தொடர் நேற்று ஆரம்பமானது.
அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம், புதிய நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஆரம்பமாகும் நாளில், அக்கிராசனத்திலிருந்து அரச தலைவர் அரசின் கொள்கைக் கூற்றை வாசிக்கவேண்டும்.
சபை அமர்வை ஆரம்பித்து வைப்பதற்கும், அரசின் கூற்றை வாசிப்பதற்கும் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தனது பாரியார் சகிதம் பிற்பகல் 2 மணியளவில் நாடாளுமன்ற வளாகத்துக்கு வந்தார். சபாநாயகரும், நாடாளுமன்ற செயலரும் அவரை வரவேற்றனர். 21 பீரங்கிக் குண்டுகள் முழங்க அரச தலைவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
பிற்பகல் 2.15 மணியளவில் அரச தலைவர் அவைக்குள் வந்து, அக்கிராசனத்தில் அமர்ந்து, கொள்கைக் கூற்றை வாசிக்க ஆரம்பித்தார். சுமார் 30 நிமிடங்கள் வரை அது தொடர்ந்தது. அதன்பின்னர் சபை நடவடிக்கைகள் இன்று பிற்பகல் ஒரு மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
சபையிலிருந்து அரச தலைவர் வெளியேறிய பின்னர், தேசிய கீதத்துடன் சம்பிரதாயபூர்வ அமர்வு நிறைவுபெற்றது.
முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, அவரின் புதல்வர் நாமல் ராஜபக்ச, முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச ஆகியோர் சபைக்கு வரவேயில்லை