யாழ்ப்பாணம் மாநகர சபையில் கடந்த காலங்களில் இடம்பெற்றன என்று கூறப்படும் ஊழல், மோசடிகள் தொடர்பான வடக்கு மாகாண சபையின் விசாரணை அறிக்கை கோரப்படவுள்ளது என்று தெரிவித்தார் யாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயர் இ.ஆர் னோல்ட்.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் அமர்வு நேற்று சபை மண்டபத்தில் நடைபெற்றது. சபையின் உறுப்பினரான ந.லோகதயாளன் இந்த விடயம் தொடர்பில் கோரிக்கை ஒன்றை முன்மொழிந்தார். கடந்த கால ஆட்சியில் சபையின் நிதி தெரிந்தே இழக்கப்பட்டமை தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் அதில் குறிப்பிட்டார்.
முன்னர் ஆட்சி செய்த கட்சி சார் உறுப்பினர் ஒருவர் நான் இங்கு எழுந்தமானமாகக் குற்றஞ்சாட்டுகின்றேன் என்று குறிப்பிட்டிருந்தார். எனினும் அந்த விடயத்தை ஆவண ரீதியாக நிரூபிக்க முடியும்.
யாழ்ப்பாணம் மாநகர சபைக்குச் சொந்தமான யாழ்ப்பாணம் நகரின் மத்தியில் உள்ள கடைத் தொகுதியின் மோல்மாடியில் இலக்கம் 5 கடையை சபையின் அனுமதி பெறாது முன்னாள் முதல்வர் தன்னிச்சையாக வழங்கியுள்ளார்.
2014ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் முதல் 2017ஆம் ஆண்டு மே மாதம் வரையான காலப்பகுதிக்கான வாடகை மற்றும் வரி, தண்டம் உட்பட 10 லட்சத்து 16 ஆயிரம் ரூபா சபைக்குச் செலுத்தப்படவுள்ளது. அந்தப் பணம் சபைக்குச் செலுத்தப்படவில்லை. இலக்கம் 2 கடையை மகேஸ்வரி நிதியத்துக்கு வழங்கியமைக்காக 56 ஆயிரத்து 12 ரூபா நிலுவை உள்ளது.
இந்த மூன்று சம்பவங்களுக்குமான சான்று ஆவணங்கள் என் வசம் உண்டு. சபைக்கு ஏற்பட்ட நட்டம் மற்றும் நிதி கிடைக்காமை என்பவற்றால் 13 லட்சத்து 48 ஆயிரத்து 12 ரூபா வீணடிக்கப்பட்டமை ஆவணங்கள் மூலம் உறுதியாகின்றது. இது போன்ற வேறு சம்பவங்களும் இருப்பின் அவற்றையும் கோரிப் பெற்று ஒரு வலுவான குழுவை நியமித்து விசாரணை செய்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். தன் வசமுள்ள ஆவணங்களையும் சபையில் காண்பித்தார்.
முன்னாள் மேயரும், தற்போதைய உறுப்பினருமான யோகேஸ்வரி பற்குணராசா இது தொடர்பில் கருத்துத் தெரிவித்தார். யாழ்ப்பாணம் நகரில் வழங்கிய கட்டடங்கள் சேதமடைந்த நிலையில் எவரும் பயன்படுத்தப்படாது இருந்தது. வருமானம் ஈட்டும் வகையில் அவை வழங்கப்பட்டன. எமது சபையின் ஆட்சிக்காலம் வரை வாடகை செலுத்தப்பட்டது. அதன்பின்னர் வாடகை பெறாதது அலுவலர்களின் தவறு.
சங்கிலியன் வீதியில் உள்ள கட்டடம் புலனாய்வாளர்களுக்கு வழங்கப்படவில்லை. அந்தப் பகுதியில் கால் நடைத் திருட்டு இடம்பெறுகின்றது என்றும் அதைக் கட்டுப்படுத்த பொலிஸ் காவலரண் ஒன்று அமைக்க வேண்டும் என்று மாவட்டக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தால் அந்தப் பகுதியில் உடனடியாக ஒரு இடத்தை வழங்க வேண்டும் என்று பணித்தார். அந்த அடிப்பயைில் பொலிஸாருக்குக் கட்டடம் வழங்கப்பட்டது. புலனாய்வாளர்களுக்கு வழங்கப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.
பாதுகாப்புக்காகப் பொலிஸார் இருந்தார்கள் என்றார் பொலிஸ் பிரிவு என பெயர் பலகை மூலம் வெளிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். குறைந்தபட்சம் அங்கிருந்தவர்கள் பொலிஸ் சீருடையிலாவது இருந்திருக்க வேண்டும். அவ்வாறு ஏதாவது இருந்ததா? என்று கேள்வி எழுப்பினர் உறுப்பினர் ந.லோகதயாளன்.
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் உறுப்பினர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் இந்தச் சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்தார்.
இதை ஒத்த விடயம் ஒன்றைக் குறிப்பிட வேண்டும். யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் அமைக்கப்பட்ட கட்டடத் தொகுதியில் உள்ள 54 கடைகளில் 32 கடைகள் மட்டும் நிபந்தனைகளுக்கு அமைய விற்பனை செய்யப்பட்டு மாநகர சபையால் பொறுப்பேற்கப்பட்டு அவற்றின் வருமானம் சபைக்கு வருகின்றது.
ஆனால் ஏனைய கடைகளும் இயங்குவதாகவே தெரிகின்றது. அவற்றின் ஒப்பந்தகாரர் சபைக்கு இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவித்தாகத் தெரியவில்லை. அப்படியானால் ஒப்பந்தகாரரின் அனுமதி இன்றி அந்தக் கட்டடம் எடுக்கப்பட்டுள்ளதா?. இது தொடர்பில் வடக்கு மாகாண சபை ஒரு விசாரணையை நடத்தியிருந்தது. அதன் அறிக்கை கோரிப் பெற்று அந்த விவரங்களை வெளியிட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
உறுப்பினர் ந.லோகதயாளனின் கோரிக்கையை உறுப்பினர் ப.தர்சானந் வழிமொழிய தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. வடக்கு மாகாண சபையின் ஊடாக நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபை முதல்வர் தெரிவித்தார்.