இரண்டு கோடி ரூபாய் இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட ஜனாதிபதி பணிக்குழுவின் தலைமை அதிகாரி ஐ.எச்.கே. மஹாநாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பீ. திஸாநாயக்க ஆகியோரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இவர்களை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஸ்ரீ ராகல உத்தரவிட்டுள்ளார்.
இந்திய வர்த்தகர் ஒருவரிடம் 10 கோடி ரூபாய் இலஞ்சம் கோரி அதில் முற்பணமாக இரண்டு கோடி ரூபாயை பெற்றுக்கொள்ளும் போது, கடந்த 3 ஆம் திகதி கொழும்பில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் இவர்ளை இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் கைதுசெய்தனர்.
அன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, சம்பவம் குறித்த விசாரணைகளை துரிதமாக நடத்தி முடிக்குமாறு நீதிவான், ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதேவேளை ஆணைக்குழுவின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி, விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர் எனக் கூறிக்கொண்ட ஒருவர், இந்திய பிரஜையின் அலுவலகத்திற்கு சென்று இந்த வழக்கு தொடர்பான தகவல்களை கேட்டறிந்துள்ளதாக கூறியுள்ளார்.