யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு எங்கிருந்தோ வருமானம் வருகின்றது என்பதால்தான் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை கடைப்பிடிப்பதில் ஈடுபட்டுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம்சாட்டி னார்.
பொதுஅமைப்புக்களுடனான கூட்டத்திலேயே முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேற்படி குற்றச்சாட்டை பகிரங்கமாக முன்வைத்தார்.
முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை கடந்த மூன்று ஆண்டுகளாக வடக்கு மாகாண சபையே பொறுப்பெடுத்து நடாத்தி வருகின்றது. அன்றைய காலங்களில் பல்கலைக்கழக மாணவர்கள் பங்குகொள்ளவில்லை.
ஆனால் இப்போது வந்து நாங்கள் கடைப்பிடிக்கத் தீர்மானித்துள்ளோம், எம்முடன் இணைய விரும்புபவர்கள் இணையலாம் என்று அறிக்கை விடுகின்றனர். இவர்களின் செயற்பாடுகளை பார்க்கும் போது மாணவர்களுக்கு எங்கிருந்தோ வருமானம் வருகின்றது. இதனால்தான் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் போல் தெரிகின்றது.
பல்கலைக்கழக மாணவர்கள் பங்களிப்புச் செய்வது என்றால் ஆரம்பத்திலேயே எம்முடன் கதைத்து ஆலோசனையை பெற்றிருக்கலாம். அதனை விடுத்து ஊடகங்கள் வாயிலாக தாம் நடாத்தவுள்ளோம் இணைய விரும்புபவர்கள் வரலாம் என்று கூறுவது சரியானதல்ல.
‘முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை வடக்கு மாகாண சபை பொறுபேற்று நடாத்தக் கூடாது என்று கூறப்படுவதற்கு பின்னால் அரசியல் சக்திகள் உள்ளனவா’ என்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த முதலமைச்சர், வடக்கு மாகாண சபைக்கு எதிராகச் செயற்படுகின்றனர் என்றால் இதுவரைக்கும் எத்தனையோ பேர் மாகாண சபைக்கு எதிராக செயற்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவராக யாராவது செயற்படக் கூடும். இவற்றை எல்லாம் நாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. கரவன் போய்க் கொண்டிருக்கும் நாய்கள் குரைத்தால் அதனைப் பார்த்துக் கவலைப்படுவதில்லை. இதற்கு மேல் சொல்ல ஒன்றுமில்லை – என்றார்.