நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் பதவியில் திலங்க சுமதிபால தொடர்ந்தும் நீடிக்க வேண்டுமென்பதில், அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் உறுதியாக உள்ளனர்.
பிரதமர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு தெரவித்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் குழப்பநிலைகளின் பின்னர், அமைச்சர்கள் உள்ளடங்கலாக 16 சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் பதவி விலகினர். இவர்களில் திலங்க சுமதிபாலவும் ஒருவர்.
இந்நிலையில், அரசாங்கத்திலிருந்து விலகிய ஒருவர் பிரதி சபாநாயகர் பதவியில் நீடிக்க முடியாதென ஐக்கிய தேசியக் கட்சியினர் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும், கட்சியின் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்னும் திலங்கவின் ராஜினாமா தொடர்பாக நாடாளுமன்றிற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லையென சபாநாயகர் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.
நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் இவ்விடயம் குறித்த வாதப் பிரதிவாதங்களும் இடம்பெற்றன.
எவ்வாறாயினும், சபாநாயகர் ஆனத்தில் திலங்க சுமதிபால அமர்ந்தால் அதற்கு ஐக்கிய தேசியக் கட்சியினர் கடும் எதிர்ப்பை வெளியிடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.