1992ஆம் ஆண்டு இரணைதீவிலிருந்து இடம்பெயர்ந்தவர்களுக்கு மாற்றுக் காணிகள் வழங்கப்பட்டுள்ளன. இவாகள் சொந்த இடத்துக்குச் சென்று மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கு எந்தவித தடையும் கிடையாது என்று அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.
இரணைதீவு மக்கள் முனனெடுத்துள்ள போராட்டம் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து 27ஃ2 நிலையியற் கட்டளையின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, பாதுகாப்பு அமைச்சிடம் முன்வைத்திருந்த கேள்விக்கு பாதுகாப்பு அமைச்சு சார்பில் ஆளும் கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் கயந்த கருணாதிலக நேற்று பாராளுமன்றத்தில் பதிலளித்தார்.
தனியார் காணிகளை கடற்படையினர் கையகப்படுத்தவில்லை என்று குறிப்பிட்ட அமைச்சர் இரணைதீவில் மீளக்குடியமர்த்துமாறு கோரி போராடி வருபவர்களின் பிரச்சினை குறித்து ஆராய்வதற்கு கடற்படைத் தளபதி, பாதுகாப்புப் படை அதிகாரிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் கொண்ட குழு, எதிர்வரும் 15 ஆம் திகதி அப்பகுதிக்கு விஜயம் செய்யவிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
இரணைதீவில் குடியிருந்த 190 குடும்பங்கள் 1992ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து பூநகரியின் முளங்காவில், இணைமாதா நகர் உள்ளிட்ட கிராமங்களில் குடியமர்ந்தனர். இவ்வாறு மீள்குடியமர்ந்த குடும்பங்களின் எண்ணிக்கை 392 ஆக அதிகரித்துள்ளது. இவர்களுக்கு மாற்றுக் காணிகள் வழங்கப்பட்டிருப்பதுடன், 297 வீடுகளும் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. இவர்களின் பிரதான வாழ்வாதாரமான மீன்பிடியை மேற்கொள்வதற்கு எந்தத் தடையும் இல்லை. இவர்கள் இரணைதீவுக்குச் சென்று தற்காலிகமாக தங்கியிருந்து மீன்பிடியில் ஈடுபடுவதற்கு கடற்படையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.
இரணைதீவில் நிலைகொண்டுள்ள கடற்படையினர் எந்தவொரு தனியார் காணிகளையும் கையகப்படுத்தவில்லை. அவர்கள் அரசாங்க காணிகளிலேயே இருக்கின்றனர். காணிகள் காணி ஆணையாளரின் ஊடாக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இந்தக் காணி அளவிடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு அதில் தனியார் காணிகள் இருந்தால் அவற்றை அனுமதியுடையவர்களுக்கு வழங்குவது பற்றி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.