இலங்கை மின்சார சபையின் நிகவரெட்டிய பிரதேச அலுவலகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
20,000 ரூபாவை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பொத்துஹர பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரால் நிகவரெட்டிய, ஹீலோகம பிரதேசத்தில் நடத்திச் செல்லப்படுகின்ற மிருக உணவு தயாரிப்பு நிலையம் ஒன்றுக்கு மின்சாரம் வழங்குவதற்கு தேவையான வேலைகளை செய்து கொடுப்பதற்கு 20,000 ரூபா இலஞ்சமாக கேட்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் குருணாகல், ரத்தலிய சந்திப் பிரதேசத்தில் வைத்து குறித்த இலஞ்சப் பணத்தைப் பெற்றுக் கொள்ளும் போது நேற்று (09) மாலை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் குருணாகல் நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.