முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவது தொடர்பில் ஆராய்வதற்கு பொது அமைப்புக்களுக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்திருந்தபோதும், பத்துக்கும் குறைவான பொது அமைப்புக்களே பங்கேற்றிருந்தன.
வடக்கு மாகாண சபை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்தும் என்று கடந்த திங்கட் கிழமை முடிவெடுத்திருந்தது. மாகாண சபையுடன் இணைந்து நினைவேந்தல் நிகழ்வை கடைப்பிடிக்க ஆர்வமுள்ள பொது அமைப்புக்களை 9ஆம் திகதி நடைபெறும் கலந்துரையாடலில் பங்கேற்க முதலமைச்சர் அழைப்பு விடுத்திருந்தார்.
வலி.வடக்கு மீள்குடியேற்றக் குழு, புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கம், புதுக்குடியிருப்பு மாற்றத்துக்கான இளையோர் அமைப்பு, ஜனநாயகப் போராளிகள் கட்சி உள்ளிட்ட 10 இற்கும் குறைவான அமைப்புக்களே நேற்றைய கூட்டத்தில் பங்கேற்றிருந்தன. யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் ஏற்கனவே அறிவித்ததைப்போன்று கூட்டத்தில் பங்கேற்கவில்லை.