குருணாகலை மாலிகாபிட்டிய விளையாட்டரங்கிற்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ‘வயம்ப ரண அபிமன்’ இராணுவ நினைவுத் தூபியை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று திறந்துவைத்தார்.
வடமேல் மாகாண கூட்டுறவுத் துறையினால் ரணவிரு நலன்பேணல் நிதியத்தின் ஊடாக நினைவுத் தூபியை நிர்மாணிப்பதற்காக வழங்கப்பட்ட நிதிக்கான காசோலை மாகாண கூட்டுறவுத் துறை அமைச்சர் பியசிறி ராமநாயக்கவினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
ஜனாதிபதி அந்த காசோலையை வடமேல் மாகாண தலைமைச் செயலாளர் பி.பீ.எம். சிறிசேனவிடம் கையளித்தார்.
வடமேல் மாகாண முதலமைச்சர் தர்மசிறி தஸநாயக்கவினால் ரணவிரு நினைவுத் தூபியின் வடிவத்தைகொண்ட நினைவுச் சின்னமொன்று ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டது .
இந்த நிகழ்வில் அமைச்சர் பைசர் முஸ்தபா, ஊவா மாகாண ஆளுநர் ஆரிய பண்டார ரெகவ, வடமேல் மாகாண ஆளுநர் கே.சீ.லோகேஸ்வரன், வடமேல் மாகாண முதலமைச்சர் தர்மசிறி தஸநாயக்க, முன்னாள் பிரதியமைச்சர் சாந்த பண்டார, பாதுகாப்பு பணிக்குழாம் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் எஸ்.ரணசிங்க, ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவி அனோமா பொன்சேகா ஆகியோர் கலந்துகொண்டனர்.