விமான நிலையங்களில் பல்வேறு மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடும் தரகர்களுக்கு தண்டனை வழங்கும் விதத்தில் விமான சேவைகள் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இது தொடர்பான திருத்தச் சட்ட மூலத்தை சமர்ப்பித்து உரையாற்றியபோதே அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
‘விமான நிலையங்களில் பல்வேறு மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடும் தரகர்களுக்கு எதிராக 25 ஆயிரம் ரூபா தண்டப்பணம் அல்லது 10 மாத சிறைத்தண்டனை வழங்கும் விதத்தில் விமான சேவைகள் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
தரகர்கள் விமானப் பயணிகளின் உறவினர்கள் எனத் தெரிவித்து விமான நிலையத்துக்குள் காணப்படுவதுடன், இவர்கள் பல்வேறு மோசடி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் விமான நிலையத்தை ஆக்கிரமித்து ஒழுங்கமைக்கப்பட்டுள்ள குழுவாகச் செயற்படுகின்றனர். இவர்களது நடவடிக்கைகள் விமானநிலைய நிர்வாகத்துக்கு பெரும் பாதிப்பாகவுள்ளதுடன், சில தரகர்கள் விமான நிலையத்தில் குற்றச்செயல்கள் பலவற்றிலும் ஈடுபட்டுள்ளனர்’ என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.