விராட் கோலி மற்றும் டி வில்லியர்ஸ் அதிரடியால் டெல்லி அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்.
ஐபிஎல் தொடரின் இன்றைய 2-வது ஆட்டம் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. டாஸ் வென்ற பெங்களூர் பந்துவீச்சை தேர்வு செய்தது.
டெல்லி அணியின் பிரித்வி ஷா, ஜேசன் ராய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 2 ரன் எடுத்த நிலையில் பிரித்வி ஷாவும், ஜேசன் ராய் 12 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 32 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் இறங்கிய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 34 பந்தில் 5 பவுண்டரி, 4 சிக்சருடன் 61 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், 6-வது வீரராக களமிறங்கிய அறிமுக வீரர் அபிஷேக் ஷர்மா அதிரடியாக ஆடி 19 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் 46 ரன் எடுத்து அசத்தினார். விஜய் சங்கர் 21 ரன் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியில், டெல்லி டேர்டெவில்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது.
பெங்களூர் அணி சார்பில் யுவேந்திர சாஹல் 2 விக்கெட்டும், மொயின் அலி, மொகமது சிராஜ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 182 ரன்களை இலக்காக கொண்டு பெங்களூர் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக பர்திவ் படேல், மொயின் அலி இறங்கினர். படேல் 6 ரன்னிலும், மொயின் அலி ஒரு ரன்னிலும் அவுட்டாகினர். இதனால் 18 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து தத்தளித்தது.
அவர்களை தொடர்ந்து இறங்கிய விராட் கோலியும், டி வில்லியர்சும் தங்களது அதிரடியை ஆரம்பித்தனர். இருவரும் டெல்லி அணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்கினர். இதனால் அணியின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. இருவரும் அரை சதமடித்தனர்.
கோலி 40 பந்தில் 70 ரன் எடுத்து அவுட்டானார். அடுத்து இறங்கிய மந்தீப் சிங் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். சர்ப்ராஸ் கான் 11 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், பெங்களூர் அணி 19 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 187 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டி வில்லியர்ஸ் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 72 ரன் எடுத்தார்.
டெல்லி அணி சார்பில் டிரென்ட் போல்ட் 2 விக்கெட்டும், லாமிச்சென், ஹர்ஷல் படேல், அமித் மிஸ்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்