வருடாந்த இடமாற்றத்தின் கீழ் மூன்று ஆண்டுகள் ஒரே மாகாணத்தில் மேல் நீதிமன்ற அமர்வில் கடமையாற்றியதன் அடிப்படையில் நாடு முழுவதும் மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டு வருகின்றது.
மேல் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்ற சிறிநிதி நந்தசேகரன், கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை சட்டமா அதிபர் திணைக்கள மூத்த அரச சட்டவாதியான டெனிஸ் சாந்தன் சூசைதாஸன், கல்முனை மற்றும் மட்டக்களப்பு குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றங்களின் நீதிபதியாக நியமிக்கப்படுகிறார்.
அத்துடன், அவருடன் இணைந்து கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி சிறிநிதி நந்தசேகரனும் கடமையாற்றவுள்ளார்.
இதனடிப்படையில், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் பெற்றுள்ளார்.
வவுனியா மாவட்ட நீதிபதி சிறிநிதி நந்தசேகரன், இலங்கை நீதிச் சேவையில் சிறப்புத் தரத்தில் உள்ளார்.
அவர், வவுனியா நீதிவான் நீதிமன்றுக்கு 2002ஆம் ஆண்டு முதல் நியமனம் பெற்றார். அதனைத் தொடர்ந்து ஊர்காவற்றுறை நீதிமன்றுக்கு மாற்றலாகி வந்த அவர், பெரும் நெருக்கடியான காலப்பகுதியிலும் அதன் பின்னரும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நியாயாதிக்க வலயத்திலுள்ள நீதிமன்றங்களில் நீதிவானாகவும் மாவட்ட நீதிபதியாகவும் சேவையாற்றினார்.
கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாத நடுப்பகுதியில் தீவகம் அல்லைப்பிட்டிப் பகுதியில் கடும் எறிகணைத் தாக்குதலுக்குள் சிக்குண்டிருந்த அப்பாவிப் பொதுமக்களை நீதிபதி நந்தசேகரன் பாதுகாத்திருந்தார்.
இராணுவ ஊடரங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த வேளையில் யாழ்ப்பாணத்திலிருந்து சென்று அந்த மக்களை மீட்டு வந்திருந்தார்.
அவரின் இந்தச் செயற்பாட்டை அமெரிக்கா பாராட்டியிருந்தது. “இலங்கையில் மிக நெருக்கடியான மோதல் மிகு பிரதேசத்தில், அங்குள்ள எல்லா இனக் குழுமங்களையும் நீதியின் முன் சமமாக நடாத்துவதில் ஒரு சட்டத்தரணியாகவும், நீதிபதியாகவும் பொறுப்புணர்வையும் துணிவையும் வெளிப்படுத்திய ஒரு முன்னுதாரணராக நீதிபதி திருமதி சிறிநிதி நந்தசேகரன் திகழ்கிறார்” என அமெரிக்கா பாராட்டியிருந்தது.
அதற்காக நீதிபதி சிறிநிதி நந்தசேகரனுக்கு ‘அமெரிக்காவின் வீரப்பெண்’ விருதை அந்த நாடு 2009 மார்ச் 24ஆம் திகதி வழங்கிக் கௌரவித்தது.
அதேபோன்று உலக பௌத்த இளையோர் சங்க சபையால் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட 14 வருடாந்த மாநாட்டில் “நியாயத்தை நிலைநாட்டுவதற்காக ஆற்றிய சேவை”யைப் பாராட்டி நீதிபதி சிறிநிதி நந்தசேகரன் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.