கடந்த 2008 ஆம் ஆண்டு மும்பையில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதல் உலகையே உலுக்கியது.
இந்த தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு உள்ளதாக கூறப்பட்டுவந்த நிலையில் தற்போது முதல் முதலாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஷ் ஷெரீப் இந்த தாக்குதல் தொடர்பாக ஒப்புதல் அளித்துள்ளார்.
மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் நுழைந்து கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி குண்டுகளை வெடித்தும், துப்பாக்கியால் சுட்டும் நடத்திய தாக்குதலில் 150 இற்கும் மேற்பட்ட அப்பாவி பொது மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.
இந்த தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உண்டு என்பதை அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் முதன் முறையாக ஒப்புக்கொண்டார்.
இது தொடர்பாக ‘தி டான்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்புகள் செயல்பாட்டில் உள்ளன. அவர்களை அரசு சாராதவர்கள் என்று சொல்லலாம். அவர்கள் எல்லை தாண்டிச்சென்று, மும்பையில் தாக்குதல் நடத்தி மக்களில் 150 பேரை கொல்ல நாம் அனுமதித்து இருக்கலாமா?” இதை எனக்கு விளக்குங்கள். இந்த வழக்கு விசாரணையை நம்மால் முடிக்க முடியாதா?” என்று குறிப்பிட்டுள்ளார்.
மும்பை தாக்குதல் தொடர்பாக ராவல்பிண்டி பயங்கரவாத தடுப்பு நீதிமன்றில் நடந்து வந்த விசாரணை முடங்கிப்போய் இருப்பது குறிப்பிடத்தக்கது