2009ஆம் ஆண்டு தமிழர்கள் அழியும் போது நிமல்கா எங்கிருந்தார்? என காணாமல் போனோரின் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மன்னாரில் காணாமல்போனோர் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்றை நேற்று (சனிக்கிழமை) முன்னெடுத்திருந்தபோதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் கூறுகையில், “2009ஆம் ஆண்டு தமிழர்கள் அழியும் பொது நிமல்கா எங்கிருந்தார்? மனித உரிமை பேசும் சிங்கள அமைப்புகள் அப்போது என்ன செய்தன?
ஜெனிவா மனித உரிமைகள் பேரவையானது, ராணுவத்தால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களை நேரடியாக அழைத்து வருமாறு கேட்கப்பட்டபோது, காணாமல் போனோர் குறித்து ஆராயும் குழுவின் ஆணையாளரான நிமல்கா பெர்னாண்டோ ராணுவ வீரர் ஒருவரின் மனைவியை அழைத்துச் சென்றுள்ளார். அதாவது அவர் பொய்ச் சாட்சியத்தை அழைத்து சென்று சர்வதேசத்தை ஏமாற்றியுள்ளார்.
நாம் காணாமல் போனோர் அலுவலகத்தை கடுமையாக எதிர்ப்பதுடன் அதில் எமக்கு நம்பிக்கையும் இல்லை. காணாமல் போனோர் என்று யாரும் இல்லை என்று ஜனாதிபதி முன்னர் கூறியிருந்தும் பின்னர் இந்த அலுவலகத்தை அமைத்துள்ளார்.
எனவே இவ்வாறானவர்கள் மூலம் எமக்கு தீர்வு கிடைக்கப்போவதில்லை. இதனால் இந்த அரசையும் அதனுடைய அலுவலகத்தையும் நாம் இனியும் நம்பப்போவதில்லை” எனத் தெரிவித்தனர் .