சர்ச்சைக்குரிய அவன் கார்ட் கடற்பாதுகாப்பு நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதியிடம் இருந்து சுமார் 300 இற்கும் அதிகமான பொலிஸார் பணம் பெற்றுள்ளமை தொடர்பான விசாரணைகளை புலனாய்வுத் துறையினர் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிஸ்ஸங்க சேனாதிபதியிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் பெயர்ப் பட்டியல் குற்றத்தடுப்புபிரிவு மற்றும், இலஞ்ச ஊழல் ஒழிப்புபிரிவினரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு சட்டவிரோதமாக பணம் பெற்றுக்கொண்ட பொலிஸ் அதிகாரிகளில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியஸ்தகர்களும் உள்ளடங்குவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பாக விரைவில் நேரடி விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், இதன்போது பணம் பெற்றுக்கொண்ட பொலிஸாரிடம் வாக்குமூலங்கள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாகவும் பொலிஸ் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அதேபோன்று நிஸ்ஸங்க சேனாதிபதி எந்த செயற்பாட்டிற்காக பொலிஸாருக்கு பணம் கொடுத்தார்? அதன் மூலமாக நிறைவேற்றப்பட்ட காரியம் என்ன? என்பது தொடர்பாகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனினும் தற்போது கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் போது அதன் காரணமாக கோட்டாபய ராஜபக்ஷவும் சிக்கல்களை சந்திக்க கூடும் எனவும் கூறப்படுகின்றமை சுட்டிக்காட்டப்படத்தக்கது.