இந்தூரில் நடந்த ஐபிஎல் போட்டியில் துல்லியமான பந்து வீச்சு மற்றும் அதிரடியான பேட்டிங்கால் பஞ்சாப் அணியை எளிதில் வீழ்த்தியது பெங்களூர் அணி.
ஐபிஎல் தொடரின் 48-வது லீக் ஆட்டம் இந்தூரில் நடைபெற்றது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கேப்டன் விராட் கோலி பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேஎல் ராகுல், கிறிஸ் கெய்ல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
ஆனால், பெங்களூர் அணியினரின் துல்லியமான பந்து வீச்சில் பஞ்சாப் அணி திணறியது. அந்த அணியில் ஆரோன் பிஞ்ச் 26 ரன்னும், லோகேஷ் ராகுல் 21 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் விரைவில் அவுட்டாகினர். இதனால் பஞ்சாப் அணி 15.1 ஓவரில் 88 ரன்களுக்கு ஆல அவுட்டானது.
பெங்களூர் அணி சார்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டும், சிராஜ், சாஹல், கிராண்ட்ஹோம், மொயின் அலி ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து, 89 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக பர்திவ் படேலும், விராட் கோலியும் இறங்கினர்.
இருவரும் முதலில் இருந்தே அடித்து ஆடியதால் அணியின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. இதனால் 8.1 ஒவரில் விக்கெட் இழப்பின்றி 92 ரன்கள் எடுத்து எளிதில் வென்றது. விராட் கோலி 48 ரன்னும், பர்திவ் படேல் 40 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர்.