33 ஆண்டுகளின் முன்னர் இதே நாளில் அரசபடைகள் நிகழ்த்திய கோரத்தாண்டவம். யாழ்ப்பாணக் குடாவின் நிலப் பரப்பிலிருந்து நீண்ட தூரத்தே நீண்ட நெடும் பரப்பாய் நிமிர்ந்து நிற்பது நெடுந்தீவு.
ஆழக்கடலின் அதிகாரத் தோரணைகளுக்கும், இயற்கையின் இறுமாப்புக்களுக்கும் இசைந்து போகாமல் தனக்கே உரித்தான கம்பீரத்துடன் கல்வேலிகளும் பனை, தென்னை, பூவரசு, ஈச்சமரங்கள் என அழகு செய்ய, நாற்புறமும் காவற் தெய்வங்களின் கண்காணிப்புடன் தனித்துவமாய் நிற்கிறது அது.
நீண்ட கடல் வெளியால் பிரிக்கப்பட்டு பயணத்துக்காக படகுகளை நம்பிக் காத்துக்கிடப்பினும், எம்மவரின் சிந்தனைகளும் செயல் வடிவங்களும் ஓங்கி ஒலித்த படிதான் என்றும் இருக்கும். ஆழிப் பேரலையால் கூட அசைக்க முடியாமற் போன எம் சொந்தங்கள் மீது 1985ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் நாள் மிகப்பெரிய வரலாற்றுக் கொடுமை நிகழ்த்தப்பட்டது.
அது கேட்டு நெடுந்தீவின் குடிமக்கள் மட்டுமன்றி உலகமே ஒரு கணம் உறைந்து போனது. அன்றைய விடுதலை வேட்கை வீறு கொண்டு வியாபித்து வளர வழ்வகுத்த வரலாற்றுச் சம்பவமாகவும் அது அமைந்ததெனலாம்.
சாதாரண பயணம்
கடற்படையினரால் படகு நிறுத்தப்பட்டது. சிறிய படகில் வந்தவர்கள் குமுதினியில் ஏறிக் கொள்ள வழமையான வெருட்டும், அச்சுறுத்தும் செயற்பாடுதான் என எண்ணியவர்களாய் பயணிகள் படகினுள் மனதுக்குள் ஒரு அச்ச உணர்வுடன் காணப்பட்டனர். உங்களையெல்லாம் சோதனை இட வேண்டும் எனக் கூறி எல்லோரையும் ஒருசேர படகின் பின்பக்க அறைக்குள் அனுப்பி விட்டு, பின்னர் ஒவ்வொருவராய் முன் அறைக்கு வரவழைக்கப்பட்டு கத்தி, கோடாரி, கொட்டன்கள் என்பவற்றால் வெட்டியும், கொத்தியும் சித்திரவதை செய்தும் படுகொலை செய்தமை என்பன கடந்து போனவை.
கடமையே கண்ணென வாழ்ந்து காட்டிய அதிபர் திருமதி பிரதானி வேலுப்பிள்ளை, ஆசிரியர்.சதாசிவம் குமுதினியின் பிரதானி தேவசகாயம்பிள்ளை, ஊழியர்களான ந.கந்தையா, ச.கோவிந்தன் மற்றும் க.கார்த்திகேசு என பல அரச உத்தியோகத்தர்களுடன் பெரியவர்கள் குழந்தைகள் கர்ப்பிணிப் பெண் உட்பட ஈவிரக்கமின்றி பலரும் குத்தியும் வெட்டியும் குதறப்பட்டனர். குருதி வெள்ளத்தில் தத்தளித்த இவர்களில் முப்பத்தாறு பேர் (36) கடற்படையினரது கொலைவெறிக்கு இரையாகி உயிரிழந்தனர். ஏனையவர்கள் உயிர் தப்பினாலும் நீண்டகால நோயாளிகளாகவே அவர்களால் வாழ முடிந்தது.
சிங்கள இனவாத அரசியலின் கொடூரமுகமும் கோழைத்தனமும் வெளிப்படுத்தப்பட்ட இந்த சம்பவம் தமிழ் இன விடியலுக்காக இளைஞர்களை வீறுகொள்ள வைத்த வரலாற்றுத் தடங்களில் முதன்மையான தெனலாம். சுமூக மான சூழ்நிலை நிலவும் போது குடும்ப உறவுகளோடு இணைந்திருக்க வேண்டியவர்கள் இன்று இல்லை என்பதை எண்ணிப்பார்க்கையில் இது எத்தனை கொடுமையானது என்பது புரியும்.
வெட்டுவதும் கொத்துவதும் வேரோடு சாய்ப்பதுவும் சிங்கள இனவாத சக்திகளுக்கு ஒன்றும் புதியதல்ல. குமுதினியில் மட்டுமல்லாது குருநகரிலும் இதே வெறியாட்டம் இடம்பெற்றதை இலேசில் மறந்து விட இயலுமா?
கவிஞர்கள் பார்வையில் குமுதினி
சமகால கவிஞர்களால் குமுதினிப்படுகொலை கவிவரிகளில் வெளிக்கொண்டு வரப்பட்டன. கவிஞர் புதுவை ரத்தினத்துரை ‘’குமுதினிப் படகில் யார் வெட்டினார்கள்…. குரு நகர் கடலில் ஏன் கொத்தினார்கள்… என்றும், நயினைக்கவி குலத்தின் ‘’கார்த்திகேசு என்னவானான்….’’என்று நீளும் கவி அவலமும் புங்கை நகர் கவிக்கோ சு.வில்வரத்தினத்தின் காலத்துயர் கவிதையூடாக
‘’முட்டைகளை வெட்ட ஏந்திய வாள்கள் மலர்களை, தளிர்களை, பிஞ்சுகளை கனிய நின்ற தோப்புகளை, என்ற வரிகளும் குமுதினிப் படகில் பேரினவாத கடற்படையினரது கத்திக்கும் கோடாரிக்கும் வாளுக்கும் இரையாகி அவலமாக உயிர் நீத்த உறவுகளின் நினைவை மனக்கண்முன் நிறுத்துகின்றன. வெட்டி எறிந்த குருதிக்காட்டில் எது பூக்கும்? என்ற ஏக்கமும் என்றும் எம் தீவு மக்களின் நாடித்துடிப்பின் அடையாளங்களாய் நீண்டு செல்லும்.
திருப்புமுனை நோக்கி
செல்லரித்துப் போன தேச கட்டுமானங்களில் எம்மவரின் இழப்புக்கள் நிலையானவை. இனவாத அரசுகளை ஆட்டங்காண வைத்த வரலாற்றுப் பதிவுகளில் ஒரு முக்கிய திருப்பு முனை. ஈழ விடுதலை வரலாற்றில் என்றும் ஈரம் காயாத வரிகளாய் நிலைத்து நிற்பது குமுதினிப் படு கொலை. அன்று அரச படைகளின் கோரத் தாண்டவத்தால் குதறப்பட்டோரை ஒன்றுபட்ட ‘’இளைஞர் அணிகளும்’’ பொது மக்களும் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்தால் அனேகமானோர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
நினைவு தினமும் நினைவாலயமும்
இறந்தோரின் நினைவாக சமய வழிபாடுகளுடன் ஊர்வலங்களும் நினைவுக் கூட்டங்களும் நடத்தப்பட்டன. ‘’இளம் பறவைகள் கலாமன்றம்’ எனும் அமைப்பு நினைவாலயம் அமைப்பதற்கான முதல் முயற்சியை செய்திருந்தது. காலப் போக்கில் பிரஜைகள் குழு, பிரதேசசபை போன்றவை தற்போதைய நினைவாலயம் வரையான ஆக்கபூர்வ பணிகளை மேற்கொண்டிருந்தன எனலாம். குமு தினிப்படகில் அரச படையினர் ஆடிய ஊழிக் கூத்தின் முப்பத்து மூன்று வருடங்கள்; நிறைவடையும் இன்றைய நாள்வரை எம்மவர் மத்தியில் குமுதினி பேசு பொருளாக அமைந்திருக்கிறது.
குமுதினியின் சேவையும், தேவையும்
குமுதினிப்படகு இற்றைக்கு சுமார் எண்பது வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது. இன்று வரை அது சேவை செய்து வருகின்றது. இடையில் பழுதடைந்தால் பத்திரிகைகள் சோக கீதம் பாடுவதைக் கேட்கலாம். அத்தனை முக்கியத்ததுவம் குமுதினிக்கு உண்டு.
காற்றும் மழையும் வெயிலும் கொடும் மழையும்
ஏற்று எமைச் சுமக்கும் குமுதினித்தாய்
கூற்றுவரின் கூட்டக்
கொடுங்கத்தி வாள்முனையில்
வீழ்ந்தாள் கடல் முனையில்
உப்புதிருங் காற்றின் உதவியுடன் கரைசேர
செத்தவராய்ப் போனோம் – நாம்
அவளோ…
சாகா வரமெடுத்தாள்
மீண்டும் எமைச்சுமக்க
குமுதினியின் வயது என்பதைத் தாண்டியுள்ளது. இந்தத் துன்பியல் இன்றுடன் முப்பத்திரண்டு ஆண்டுகளைக்கடந்து நிற்கின்றது. எமது வாழ்வின் நெருக்கீடுகளையும், தடைகளையும் உணர்ந்து கொள்ளும் ஒரு நாளாக இன்றைய நாள் அமையும். குமுதினிக்குள் நடந்த இந்த சோகங்களைப் போல், குமுதினியும் பல சோகங்களைச் சுமந்தும் நெடுந்தீவு மக்களை சுமந்து கரை சேர்க்கும் தாயாக பாரிய பொறுப்பை இன்றும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றாள்.
ஈரமின்றி இறுகிப்போன மனித மனங்களுக்கு வாழ்வின் வலியையும், வழியையும், வனப்புக்களையும் சொல்லும் வளமான ஆசானாய் இன்றும் எம்முடனே வலம் வருகிறாள் குமுதினியாள். என்றும் அவளே துணை என்ற நினைப்புக்களு டன் எம்ம வரின் கடல்வழிப் பயணம் தொடர்கின்றது.
குற்றவாளிகள் யார்?
அன்றைய அரசின் கட்டளைக்கு அமைய செய்யப்பட்டதாகக் கருதப்படும் இந்தச் சரித்திர அவ நிகழ்வு காலங்காலமாக உறவுகளாலும் ஊரவராலும் பேசப்பட்டாலும் ‘’அரசியல்வாதிகள்’’ இன்னமும் சிறுபிள்ளைகளாகவே இருப்பதாய் எண்ணத் தோன்றுகின்றது. குற்றவாளியாகக் கொள்ளத்தக்கவர்களுக்கு பாதபூசை செய்பவர்களாக எம்மவர்கள் மாறிவிட்டார்களே. இன ஐக்கியம், மத நல்லிணக்கம் என்பவற்றின் பேரால் இந்த இழப்புக்களையும் மறப்பதைத் தவிர வேறு வழி என்ன இருக்கிறது எமக்கு? அமைதியாய் அமைதிக்காய் மௌனிப்போம்.