இலங்கை வான் படையினர் சாவகச்சேரி பொதுச் சந்தையில் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த 13 பொதுமக்கள் நேற்று நினைவேந்தப்பட்டனர். தமிழினப் படுகொலை வாரத்தின் 3ஆம் நாளில் சாவகச்சேரி பொதுச் சந்தையில் நினைவேந்தல் நடத்தப்பட்டது.
1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் திகதி இலங்கை வான் படையின் உலங்குவானூர்தி சாவகச்சேரி பொதுச் சந்தை மீது தாக்குதல் நடத்தியது. அதில் 13 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
நேற்று மாலை 5 மணிக்கு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் நடைபெற்ற நினைவேந்தலில் சாவகச்சேரி நகரபிதா சிவமங்கை இராமநாதன் முதன்மைச் சுடர் ஏற்றினார்.
சாவகச்சேரிப் பிரதேச சபைத் தவிசாளர் க.வாமதுசன், சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் அ.பாலமயூரன், உறுப்பினர்களான க.தர்சன், திருமதி சுபோதினி, முன்னாள் உறுப்பினர்களான நா.கிசோர், அ.செல்வரத்தினம் உட்படப் பலர் நினைவேந்தலில் கலந்து கொண்டனர்.
அதேவேளை, தமிழினப் படுகொலை நாளான மே 18ஆம் திகதிக்கு முன்னரான ஒருவார காலம் தமிழ் இனப்படுகொலை வாரமாக அறிவிக்கப்பட்டுப் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.