தீவுகளில் பெரியது வேலணை. சனத்தொகையிலும் அதுவே முதன்மை இடம் வகிக்கிறது. இதனால், இந்த வழியாக யாழ்ப்பாணத்தை நோக்கிச் செல்கின்ற பயணிகள் பேருந்துகளின் முதன்மை இலக்காக இந்தப் பகுதிப் பயணிகளே விளங்குகின்றனர்.
யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் பயணிகளே பேருந்துகளுக்கிடையிலான போட்டி ஓட்டங்கள் ஒன்றும் வியப்புக்குரியவை அல்ல. இத்தகைய போட்டி ஓட்டங்கள் விபத்துக்களுக்கு வழிவகுப்பது மாத்திரமல்லாது பயணிகளுக்கு அசௌகரியங்களையும் ஏற்படுத்துகின்றன.
இதற்கு மேலாக, பயணிகள் எவரையும் ஏற்றாமல்கூடப் போட்டிக்கு ஓடி முடிக்கின்ற கோமாளித்தனத்துக்கும் குறைவில்லை. வேலணைப் பகுதியில் நிகழும் பயணிகள் பேருந்துகளின் போட்டி ஓட்டம் சற்று வித்தியாசமானது. கிட்டத்தட்ட நான்கு தரப்பினர் ஒரே வேளையில் போட்டி போட்டு ஓடும் களமாக இருக்கிறது வேலணை.
குறிகாட்டுவான் மற்றும் ஊர்காவற்றுறை ஆகிய வழித்தடங்களுக்குரிய இரண்டு பேருந்துச் சேவைகளும் ஒன்றாகச் சந்திக்கும் களம் இது. வேலணைத் துறையூர்ச் சந்தியில் ஆரம்பிக்கும் ஓட்டப்பந்தயம், வங்களாவடிச் சந்தி வரையில் கடும் போட்டியாக இடம்பெற்று, பின்னர் அந்த வழித்தடத்தின் இறுதித் தரிப்பான அல்லைப்பிட்டி வரையில் நீடிக்கின்றது.
ஊர்காவற்றுறை வழித்தடத்துக்குரிய தனியார் பேருந்துகள் வேலணைச் சந்தியை வந்தடைந்ததும், அங்கு தரித்து நின்று பரந்த வெட்டையாகத் தெரிகிற புங்குடுதீவுக் கடல் வீதியூடாகத் தொலைவில் குறிகாட்டுவான் வழிப் பேருந்துகள் ஏதாவது வருகின்றனவா? என்று கவனித்தபடி அவ்விடத்தில் உறங்கு நிலையில் தரித்துக் கிடக்கின்றன.
இதில் கிட்டத்தட்ட இரண்டரைக் கிலோமீற்றர்கள் நீளமான அந்தக் கரடுமுரடான, நௌிவு சுழிவான வீதியைக் கொண்ட பிரதேசத்துக்குள்தான் கடும் ஓட்டப் போட்டி நிகழ்கிறது. அத்துடன் இரண்டு பேருந்துகள் மாத்திரம் போட்டிக்கு ஓடுவதில்லை.
ஊர்காவற்றுறை வழித்தடத்துக்குரிய தனியார் மற்றும் அரச, குறிகாட்டுவான் வழித்தடத்துக்குரிய தனியார் மற்றும் அரச பேருந்துகள் எனச் சிலவேளைகளில் நான்கு பேருந்துகளின் ஓட்டப்பந்தயக் களமாகவும் மாறிவிடுகிறது குறித்த பகுதி. இத்தனைக்கும் வேலணைச் சந்தியில் நேரக் கண்காணிப்பாளர் ஒருவரும் சிவனே என்று தவம் இருக்கிறார்.
இவர்களின் இத்தகைய போட்டி ஓட்டத்தால் வேலணைப் பகுதிமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். ஏதாவது பாரதூரமான சம்பவங்கள் நிகழ்வதற்கு முன்பாகக் குறித்த விடயம் சார்ந்து முடிவெடுக்கக்கூடிய அதிகாரமுடையவர்கள், உடனடியாக இந்த விடயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்.போட்டிக்கு ஓடுகிற இத்தகைய பேருந்துகளில் பயணிப்பதை பயணிகள் தவிர்த்தல் இவர்களின் இத்தகைய பந்தயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க இயலும்.