யாழ்ப்பாணம் ஆவா:ஆவா என்றழைக்கப்படும் வாள்வெட்டுக் குழுவுடன் தகவல்களைப் பரிமாறிய குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா றொஷான் பெர்ணான்டோ தெரிவித்தார்.
ஆவா குழுவின் தலைவர் ஒருவருடன் அலைபேசியில் தொடர்பிலிருந்து பொலிஸாரின் தகவல்களை வாள்வெட்டுக் குழுவுக்குக் கூறிவந்தார் என்று மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் குற்றஞ்சாட்டுகிறார்.
அதனால் குறித்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க பொலிஸ் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
விசாரணையில் அவர்மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.
“மணல் கடத்துவோர் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்குக் கையூட்டு வழங்குகின்றனர் என்றும் அதனைச் சாதாரண பொலிஸ் உத்தியோகத்தர்கள் தடுத்து நிறுத்தியதாலேயே குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு இடமாற்றம் வழங்கப்படுகிறது” என்றும் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவிக்கையில், “மணல் ஏற்றப்படும் ஊர்காவற்றுறை உள்ளிட்ட இடங்களில் தற்போது மணல் ஏற்றப்படுவது முற்றாகத் தடுக்கப்பட்டுள்ளது.
அதனால் அந்த இடங்களில் புற்கள் முளைத்துள்ளன. மணல் ஏற்றுமிடங்களில் புற்கள் முளைக்காதே. அதனை அந்த இடங்களுக்குச் சென்று பார்வையிட முடியும்” என்று தெரிவித்தார்.