பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் இந்த சீசனில் முதல் வீரராக 600ஓட்டங்களைக் கடந்து, ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றியுள்ளார்.
மும்பையில் நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில் மும்பை, பஞ்சாப் அணிகள் மோதின. மும்பை அணி 187 ஓட்டங்கள் இலக்கினை பஞ்சாப்பிற்கு நிர்ணயித்தது.
ஆனால், 20 ஓவர்கள் முழுமையாக ஆடிய பஞ்சாப் அணி 183 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இப்போட்டியில் பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் 94 ஓட்டங்கள் எடுத்தார்.
இதன்மூலம் இந்த சீசனில் அவர் மொத்தம் 652 ஓட்டங்கள் குவித்துள்ளார். அத்துடன் ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்றிய அவர், இந்த சீசனில் 600 ஓட்டங்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
மேலும், ஐ.பி.எல் தொடரின் ஒரு சீசனில் 600 ஓட்டங்கள் கடந்த நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
இந்த சீசனில் தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ராகுல், 32 சிக்ஸர்கள் மற்றும் 65 பவுண்டரிகள் அடித்துள்ளதால் அதிக சிக்ஸர்கள், பவுண்டரிகள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளார்.
கடந்த சீசன்களில் 38 போட்டிகளில் விளையாடிய ராகுல், 725 ஓட்டங்கள் குவித்திருந்தார். ஆனால், இந்த சீசனில் வெறும் 13 போட்டிகளிலேயே 652 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
மேலும், ஐ.பி.எல்-லின் ஒரு சீசனில் ராகுல் 600 ஓட்டங்கள் எடுத்திருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.