அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பர்க் நகரை சேர்ந்தவர் டால்மேட்ச் எலியா (38). இவருக்கு சிகரெட் பழக்கம் இருந்தது.
நேற்று முன்தினம் இரவு இவர் தனது படுக்கை அறையில் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடல் 80 சதவீதம் கருகிய நிலையில் இருந்தது.
படுக்கை அறையில் உடல் கருகி இறந்தது எப்படி, என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்தது. எனவே அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் இ-சிகரெட் பிடிக்க பயன்படுத்தப்படும் குழாயின் கூரியபகுதி அவரது மண்டை ஓட்டுக்குள் பாய்ந்து இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
எனவே, அவர் இ-சிகரெட் புகைக்கும் போது அந்த குழாய் வெடித்து சிதறியதில் படுக்கை அறையில் தீப்பிடித்து அவர் உயிரிழந்து இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
அமெரிக்காவில் 2009 முதல் 2016-ம் ஆண்டுவரை 195 இ-சிகரெட் வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அதில் 133 பேர் காயம் அடைந்துள்ளனர். ஆனால் உயிரிழந்த சம்பவம் தற்போது தான் முதன் முறையாக நடந்துள்ளது.