பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்ட இறுதிப்போரின் முள்ளி வாய்க்கால் நினைவு தினத்தையொட்டி கனேடிய தலைமை அமைச்சர் ஜஸ்ரின் ரூடோ நேற்று அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.
நல்லிணக்கம், மீளநிகழாமை, அமைதி மற்றும் நீதி, என்பவற்றை அடைவதற்கான இலங்கை அரசினுடைய முயற்சிகளுக்கு கனடா முழுமையான ஆதரவு வழங்கும் என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்்.
பொறுப்புக் கூறல், நிலைமாறுகால நீதி, குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பிக்கும் போக்கை முடிவுறுத்தல், என்பவற்றின் மீது உள்நாட்டிலும், பன்னாட்டுச் சட்டத்திலும் இலங்கைக்குள்ள பொறுப்பை நிறைவேற்ற அரசு எடுக்கும் முயற்சிக்கும் கனேடியத் தலைமை அமைச்சர் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
போர் நிறைவுற்று 9ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அவர் இந்தச் சிறப்பு அறிக்கையை நேற்று வெளிட்டார். போரால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது இழப்புக்கான பதிலை வேண்டி நிற்கின்றார்கள் என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
” போரில் தப்பிப் பிழைத்தவர்களின் நம்பிக்கையை வெல்லக்கூடியதுமான பொறுப்புக்கூறல் செயற்பாடுகளை இலங்கை அரசு உருவாக்க வேண்டும்” என்றும் அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.