வவுனியா பொது வைத்தியசாலையில் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள புதிய எக்ஸ்ரே கருவி ஒன்று பொருத்தப்பட்டு நேற்று (18.0 5) முதல் இச்சேவைகள் இடம்பெற்று வருவதாக வைத்தியசாலைப்பணிப்பாளர் வைத்தியர் கு.அகிலேந்திரன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கும்போது, கடந்த சில தினங்களாக வவுனியா பொது வைத்தியசாலையில் பாவனையிலிருந்த எக்ஸ்ரே கருவி பழுதடைந்து காணப்பட்டுள்ளது. இதனால் வவுனியா வைத்தியசாலையிலுள்ள நோயாளர்களை காவு வண்டியின் உதவியுடன் செட்டிகுளம் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று எக்ஸ்ரே எடுக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்துள்ளது.
எனினும் தற்போது எமது வைத்தியசாலைக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட புதிய எக்ஸ்ரே கருவி நேற்று பொருத்தும் பணிகள் இடம்பெற்றிருப்பதுடன் இன்று (18.05.2018) முதல் வவுனியா வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் அனைவருக்கும் புதிய எக்ஸ்ரே கருவியின் உதவியுடன் சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக மேலும் தெரிவித்தார்.