மட்டக்களப்பு, ஆரையம்பதி பகுதியில் தங்க நகைகளை கொள்ளையிட்ட சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இரு மாணவர்கள் உட்பட ஐவரை விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர்களை நேற்று நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியப்போது நீதிபதி எம்.கணேசராஜா எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 15ஆம் திகதி ஆரையம்பதி பகுதியிலுள்ள வீடொனறில் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தபோது குறித்த வீட்டில் பணிபுரிந்ததாகச் சொல்லப்படும் இளைஞர் ஒருவர், இரு மாணவர்கள் உட்பட ஐவரை பொலிஸார் கைது செய்ததுடன் பதினெட்டரை பவுண் நகையையும் மீட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து குறித்த சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணையை முன்னெடுத்தபோது அவர்கள் கொள்ளையிட்ட நகைகளில் ஏனையவற்றை நகைக்கடைகளில் விற்பனை செய்திருந்தமை தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்