முன்னாள் போராளிகளான ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் கதிர் எனப்படும் ரா.கிருபாகரனை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசார ணைக்கு அழைத்துள்ளனர். கடிதம் மூலமாக இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
“பயங்கரவாத விசாரணைப்பிரிவின் கொழும்பு தலைமையகத்தில் வாய்மொழி முறைப்பாடு, விசாரணைக்காக வருமாறு கடந்த 9 ஆம் திகதிய கடிதம் மூலமாகக் குறிப்பிடப்பட்டு பயங்கரவாத விசாரணைப்பிரிவின் கிளிநொச்சி ஒன்றியம் என்று குறிப்பிட்டுக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அதற்கமைய கிளிநொச்சியிலுள்ள அவர்களது அலுவலகத்துக்குச் சென்று திகதியை 14 ஆம் திகதி விசாரணைக்கு வருகை தருவதாக திகதி மாற்றம் செய்து குறித்த திகதியில் கொழும்பில் அமைந்துள்ள பயங்கரவாத விசாரணைப்பிரிவுக்குச் சென்றிருந்தேன்.
ஜனநாயக போராளிகள் கட்சியின் செயற்பாடுகள், போராளிகள் அரசியல் கட்சியை உருவாக்கியதன் நோக்கம், வடக்கில் தேசிய நிகழ்வுகளைக் கொண்டாடுவதன் நோக்கம், எமது கட்சியில் உள்ள போராளிகளின் போராட்ட கால செயற்பாடுகள், கட்சியின் நிதி செயற்பாடுகள், வெளிநாட்டு தொடர்பாடல்களை வைத்திருத்தல் தொடர்பில் விசாரணை மேற்கொண்டனர்.
இது ஜனநாயக வழியில் இணைந்து செயற்படும் எமது கட்சி முன்னாள் போராளிகளை அச்சுறுத்தும் செயற்பாடாகவே இந்த விசாரணைகள் இடம்பெற்றுள்ளது என்று நாம் கருதுகிறோம்.
இது தொடர்பிலான விசாரணைகள் முடியவில்லை என்றும் மறுபடியும் அழைத்து விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் கொழும்பில் உள்ள பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர் என்று கிருபாகரன் மேலும் தெரிவித்தார்.