இன்றைய செய்திகள்:பிரபாகரனால் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட கிளர்ச்சிகள் தென்னிலங்கையில் இருந்தவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட கிளர்ச்சி அல்ல என்று உயர் கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்தும் பேசிய அவர்,
வடபுலத்தில் இருந்த பொருளாதார ஏற்றத்தாழ்வின் காரணமாக, பொருளாதாரத்தை பெருவாரியாக சுவீகரித்து கொண்ட ஒரு தரப்பினருக்கும், அல்லது அரசியல் தலைமையினருக்கும், சாதாரண மக்களிற்கும் இடையில் ஏற்பட்ட இடைவெளி, அல்லது பாரபட்சத்தை நீக்குவதற்காக உருவாக்கப்பட்டதாகவே, நான் கருதுகிறேன்.
எனினும் அப்போது அரசியல் தலைமை வகித்த அமிர்தலிங்கத்தின் கருத்துக்களை ஒட்டியே, வடக்கின் கிளர்ச்சிகள் ஒரு இனவாத கிளர்ச்சியாக, அல்லது இன ரீதியான பிரச்சினைகளாக உருவெடுத்தன.
இந்த நிலையில் அமிர்தலிங்கத்தின் ஆசீர்வாதத்தோடு துப்பாக்கியை கையில் எடுத்த பிராபகரன் பேராபத்து மிக்க தலைமைத்துவத்தின் ஊடாக வடக்கு கிழக்கில் இருந்த பல அரசியல்வாதிகளினுடைய உயிர்களை காவு கொள்ளக் காரணமாக இருந்தார்.
எனவே அப்போது இருந்த அரசியல் தலைவர்கள் தங்களது சமூகத்திற்கு பொறுப்பு கூறுவதை, அவர்களின் சுபீட்சத்திற்கு வழிசமைப்பதை விடுத்து, பயங்கரவாத தலைவரான பிரபாகரனிடம் சமூகத்தின் தலையெழுத்தை மாற்றுவதற்கான பொறுப்பை வழங்கியிருந்ததன் ஊடாக கடந்த 30 வருட காலமாக அனைவரும் பெருவாரியான இழப்புக்களையும், அழிவுகளை நாம் சந்தித்திக்க வேண்டி இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.