இலங்கையில் இருந்து சுவிட்சர்லாந்திற்குச் சென்று பிரபல வைத்தியசாலை ஒன்றில் பணிபுரிந்து வரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வினோதா ஜெயமோகன் என்பவரின் சேவையைப் பாராட்டி சுவிஸ் அரச பிராந்திய பத்திரிகையான வைனந்தால் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
யாழ். வடமராட்சியை பிறப்பிடமாகக்கொண்ட குறித்த பெண் மட்டக்களப்பு தாதியர் பாடசாலையில் தாதியர் பயிற்சியை நிறைவுசெய்து, அதன் பின்னர் திருகோணமலை பொதுவைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தராக பணிபுரிந்துள்ளார்.
இந்நிலையில், சுவிஸ் நாட்டில் pain nurse , ICU துறைகளில் உயர்கல்வியை மேற்கொண்ட இவர் தற்போது சுவிட்சர்லாந்தில் உள்ள பிரபல வைத்தியசாலையான அசான வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் சிரேஷ்ட தாதிய உத்தியோகத்தராக பணிபுரிந்து வருகின்றார்.
ஆர்காவோ மாநிலத்தில் உள்ள குறித்த வைத்தியசாலையில் உள்ள அவசர சிகிச்சைப்பிரிவின் தாதிய உத்தியோகத்தராக கடந்த ஆறு ஆண்டுகளாக கடமையாற்றிவருகிறார் .
அங்கு தற்போது Lean Management of hospital என்கிற நவீனத்துவமான திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகிறது, இத்திட்டம் சுவிஸில் உள்ள பிரபல இரு வைத்தியசாலைகளிலே அமுலில் உள்ளதுடன் இத்திட்டத்தின் நோக்கம் நோயாளர்களுக்கு மிக உயர்தரமான சேவையை வழங்குவதாகும்.
இந்நிலையில், இத்திட்டம் குறித்து அறிந்து செய்தியை வெளியிடும் முகமாக வைனந்தால் பத்திரிகையாளர் நேரடியாக வைத்தியசாலைக்கு சென்று அவதானித்து இந்த செய்தியை வெளியிட்டுள்ளார்.
அந்த வகையில் அவசரசிகிச்சைப்பிரிவுக்கு பொறுப்பாக கடமையாற்றிய வினோதா ஜெயமோகன் தொடர்பில் அவதானிக்கையில், நோயாளர்களோடு அன்பாகவும், அமைதியாகவும், உயர்மருத்துவ அறிவோடும், உயர்தர மருத்துவ உபகரணங்களை கையாண்டும், நோயாளர்களுக்கு சிகிச்சையளித்து வந்துள்ளார்.
அவரின் சேவையை அவதானித்த செய்தியாளர் அவரை பாராட்டி அவற்றை அப்படியே செய்தியாக வைனந்தால் பத்திரிகையில் வெளியிட்டுள்ளார்.