ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தை விட்டு விலகவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அத்தோடு, ஏற்கனவே அரசாங்கத்திலிருந்து விலகிய 16 உறுப்பினர்களும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இவ்வாரம் சந்திக்கவுள்ளதாகவும், இரு அணிகளுக்கு இடையில் இணக்கப்பாட்டின் பிரகாரம் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் தற்போதைய நிலைவரம் தொடர்பாக கொழும்பு ஊடகமொன்றிற்கு கருத்துத் தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் மீது அதிருப்தி கொண்ட சில உறுப்பினர்கள் எதிர்வரும் காலத்தில் அரசாங்கத்திலிருந்து விலகுவார்கள் என்றும், அவர்களையும் இணைத்துக்கொண்டு செயற்படவுள்ளதாகவும் தயாசிறி மேலும் கூறியுள்ளார்.
பிரதமர் ரணிலுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பநிலைகளைத் தொடர்ந்து, சுதந்திரக் கட்சியின் 6 அமைச்சர்கள் உள்ளிட்ட 16 பேர் அரசாங்கத்திலிருந்து விலகியுள்ளனர். இவர்கள், கடந்த நாடாளுமன்ற அமர்வில் எதிரணியில் அமர்ந்தமை குறிப்பிடத்தக்கது.