சுன்னாகம் உள்ளிட்ட இடங்களில் நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்தமைக்கு நொதேர்ன் பவர் நிறுவனமும் காரணமாக இருக்கலாம் என்று மல்லாகம் நீதிமன்றில் நேற்றுத் தெரிவிக்கப்பட்டது.
மையச் சுற்றாடல் அதிகார சபையின் முன்னைய பணிப்பாளர் நாயகமும் தற்போதைய பிரதிப் பணிப்பாளர் நாயகமுமான கோலித இமால் முத்துக்கொட இவ்வாறு தெரிவித்தார்.
நிலத்தடி நீரில் தண்ணீர் கலந்தமை தொடர்பான வழக்கு மல்லாகம் நீதிமன்றில் நீதிவான் ஏ.ஜீட்சன் முன்னிலையில் நேற்று வந்தது. வழக்கில் முன்னர் சமர்ப்பிக்கப்பட்டிருந்த ஐ.ரி.ஐ நிறுவன அறிக்கை குறுக்கு விசாரணை செய்யப்பட்டது. அதில் சாட்சியமளிக்கும் போதே முத்துக்கொட இவ்வாறு தெரிவித்தார்.குறித்த அறிக்கையைக் கொண்டு, நொதேர்ன் பவர் மின் உற்பத்தி நிறுவனத்தை மீளத் திறக்கலாம் என்று பிரதிப் பணிப்பாளர் நாயகம் கூறியிருந்தார். வழக்கின் சாட்சிகளில் ஒருவரான அவரிடம் அந்த அறிக்கை தொடர்பில் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. அதன்போது அந்த அறிக்கையில் குறைபாடு உள்ளது என்று பின்னர் நீதிமன்றில் தெரிவித்தார்.
அறிக்கை தொடர்பான தொடர் குறுக்கு விசாரணைக்காக வழக்கு எதிர்வரும் செப்டெம்பர் 3 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. வழக்கில் முறைப்பாட்டாளர்கள் சார்பில் சட்டத்தரணிகளான கு.குருபரன், ஜெ.ஜெயரூபன் ஆகியோர் முற்பட்டிருந்தனர்.
நொதேர்ன் பவர் சார்பில் அரசதலைவர் சட்டத்தரணி டிலான் பிலிப் மற்றும் சட்டத்தரணிகளான நளின்திசாநாயக்க, திருமதி சிவபாதம் ஆகியோர் முற்பட்டிருந்தனர்.