தனது மனைவின் சடலத்தை பெற்றுக்கொள்ள முடியவில்லை என தெரிவித்து கணவர் அவரது வீட்டின் அருகில் உள்ள மரமொன்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.பொலன்னறுவை அபேபுரகம பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அவர் இதற்கு சில வருடங்களுக்கு முன்னர் மாவனெல்லையில் உள்ள அவரது உறவினரொருவரின் வீட்டிற்கு வந்துள்ள நிலையில் , அயல்வீட்டில் இருந்த பெண்ணொருவரை காதலித்துள்ளார்.
குறித்த பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இந்த தொடர்பிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.எனினும் , இருவரும் வீட்டை விட்டு வௌியேறி பொலன்னறுவை அபேபுரகல பிரதேசத்தில் அமைந்துள்ள இளைஞரின் வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
பின்னர் , பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வந்து அந்த பெண்ணை அழைத்துச் செல்ல முற்பட்டிருந்த போதும் , அவர்கள் இருவரும் சட்டரீதியாக திருமணம் செய்துக் கொண்டிருந்தமையால் அது வெற்றியளிக்கவில்லை.
சில வருடங்களுக்கு பின்னர் அவர்களுக்கு பெண் குழந்தையொன்று பிறந்துள்ள நிலையில் அவருக்கு ஒன்றரை வயதான நிலையிலேயே இந்த துரதிருஷ்டவசமாக சம்பவத்துக்கு அவர்கள் முகங்கொடுத்துள்ளனர்.
கடந்த தினத்தில் குறித்த இருவரும் உந்துருளியில் உறவினரொருவரின் வீட்டிற்கு சென்று வந்துள்ள நிலையில் , வரும் வழியில் அமைந்துள்ள Z D கால்வாயில் உந்துருளி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.இதன் போது , பிரதேசவாசிகளால் கணவன் காப்பாற்றப்பட்ட போதும் , அவரது மனைவி உயிரிழந்துள்ளார்.
பின்னர் , குறித்த பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவரது உறவினர்கள் காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர்.இந்நிலையில் , தனது மனைவியின் உடலத்தை பெற சில நாட்களாக முயற்சித்து வந்த கணவர் கடந்த தினத்தில் இரவு வீட்டின் அருகில் உள்ள மரமொன்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.