சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜிஹாதி குழுவினர் நாட்டின் பல பகுதிகளை கையகப்படுத்தி, தங்களது ஆதிக்கத்தின்கீழ் வைத்து நிர்வகித்து வருகின்றனர். இதுதவிர, ஐ.எஸ். பயங்கரவாதிகளும் சில பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இந்த குழுக்களையும் வேட்டையாட ரஷியா விமானப் படையின் துணையுடன் அந்நாட்டு முப்படைகளும் தீவிரமாக போரிட்டு வருகின்றன.
இதற்கிடையே, கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற சண்டையில் கூட்டுப்படையினர் ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து கடைசி நகரையும் கைப்பற்றினர்.
இந்நிலையில், டெய்ர் அல்-சோர் மாகாணத்தில் உள்ள மயாதின் நகரில் சிரியா மற்றும் ரஷியாவை சேர்ந்த ராணுவ வீரர்கள் இன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள் மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 35 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சண்டையில் 43 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் 26 பேர் சிரியாவை சேர்ந்தவர்கள் எனவும், 9 பேர் ரஷியாவை சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது. முன்னதாக இந்த பகுதியில் உள்ள அரசு ஆயுத கிடங்கை குறிவைத்து சில பயங்கரவாதிகள் நேற்றிரடு நடத்திய தாக்குதலில் 4 ரஷிய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.