நெடுந்தீவுப் பிரதேச சபையின் உப தவிசாளர் இறந்ததைத் தொடர்ந்து அந்தப் பதவிக்கு எதிர்வரும் 12 ஆம் திகதி மீண்டும் போட்டி இடம்பெறவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
உள்ளூராட்சி சபைகளின் தேர்தலின் பின்னர் வடக்கில் பல சபைகள் தொங்கு நிலையில் காணப்பட்டன.
இதனால் பலத்த போட்டிகளுக்கு மத்தியில் அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் சபைகளின் நிர்வாகத்தைக் கைப்பற்றியிருந்தன. நெடுந்தீவுப் பிரதேச சபைக்கான தவிசாளர், உப தவிசாளர் தெரிவில் பலத்த போட்டிக்கு மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியைக் கைப்பற்றியது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து உப தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்ட சண்முகம் லோகேஸ்வரன் சுகவீனம் காரணமாக நோய்வாய்ப்பட்ட நிலையில் சபை ஆரம்பித்துச் சில நாள்களிலேயே உயிரிழந்தார்.
இந்த நிலையில் சபையின் உப தவிசாளருக்கான வெற்றிடம் காணப்பட்டது. எனவே அந்த வெற்றிடத்துக்கான தேர்வை மேற்கொள்ள வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் எதிர்வரும் 12 ஆம் திகதி மீண்டும் போட்டி நடத்தப்படவுள்ளது.