நாவாந்துறைப் பகுதியிலிருந்து நேற்று முன்தினம் இரவு ஒரு படகில் மீன்பிடிக்கப் புறப்பட்டுச் சென்ற மூன்று மீனவர்களைக் காணவில்லை என்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாவந்துறை வடக்கைச் சேர்ந்த ஜோன் மல்கன் விமல் (44), செபமாலை அலெக்ஸ் (35), மகேந்திரன் ரூபன் (30) ஆகியோரே காணாமல் போயுள்ளனர்.நேற்று முன்தினம் மாலை நாவந்துறை கடலிருந்து படகில் மூவரும் புறப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவுப் பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்இந்த நிலையில் நேற்றுக் காலை 8 மணிக்கு ஜோன், தனது மனைவிக்கு அலைபேசி அழைப்பு எடுத்துள்ளார். படகு இயந்திரம் பழுதடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர், அவரது அலைபேசி இயங்கவில்லை.இந்த நிலையில் நேற்றைய தினம் அவர்களுடன் மீண்டும் தொடர்பு கிடைக்காத நிலையில், உறவினர்களால் கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களம் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது.
கடற்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டு கடற்படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.