சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் பலியாகியுள்ளதுடன், 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
மானாமதுரை அருகே உள்ள ஆவரங்காடு, கச்சநத்தம் என்ற இரு கிராமங்களை சேர்ந்த சமூகத்தினரிடையே நீண்ட நாட்களாக மோதல் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று ஆவரங்காடு கிராமத்தின் வழியே இரு சக்கரவாகனத்தில் சென்ற இரு இளைஞர்களை, கச்சநத்தம் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் தாக்கியதாக தெரிகிறது. இதற்கிடையில் கச்சநத்தம் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஆவரங்காடு கிராமத்தில் உள்ள வீடுகளில் புகுந்து சிலரை தாக்கியுள்ளனர்.
இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 200க்கும் மேற்பட்ட காவலர்கள், சம்பவத்தில் படுகாயமடைந்த சுரேஷ், சந்திரசேகர், சுகுமாறன், தனசேகரன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், ஆறுமுகம் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மருதுபாண்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.