வடக்கு, கிழக்கில் 25 ஆயிரம் வீடுகள் தேசிய நல்லிணக்க அமைச்சின் ஊடாகவும், 40 ஆயிரம் வீடுகள் மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாகவும் அமைக்கப்படவுள்ளன என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்தாவது:-
“வடக்கு, கிழக்கில் வீடு தொடர்பான பிரச்சினை பிரதானமானது. அதைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நல்லிணக்க அமைச்சின் ஊடாக 25 ஆயிரம் கல் வீடுகள் அமைக்கப்படும். அதேபோன்று மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாக 40 ஆயிரம் வீடுகள் அமைக்கப்படும். மீள்குடியேற்ற அமைச்சு ஊடாகவும் கல் வீடுகளே அமைக்கப்படவுள்ளது” – என்றார்.
அதேவேளை, வடக்கு, கிழக்கில் 50 ஆயிரம் கல்வீடுகள் அமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில் கூறப்பட்டிருந்தது. அதற்கு மேலதிகமாகத் தற்போது 15 ஆயிரம் வீடுகள் வடக்கு, கிழக்கில் அமைக்கப்படவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடுகள் நல்லிணக்க அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு அமைவாக முதல் கட்டத்தில் 25 ஆயிரம் வீடுகளை, யுஎன் ஹபிட்டாட், யுனொப்ஸ், எஸ்.எல்.ஆர்.சி ஊடாக அமைப்பதற்கு அந்த நிறுவனங்களுடன் பேச்சு நடத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. எஞ்சிய 25 ஆயிரம் வீடுகள் அடுத்த கட்டத்தில் அமைக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்தநிலையில் மீள்குடியேற்ற அமைச்சு, தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் ஊடாக 40 ஆயிரம் கல் வீடுகளை நிர்மாணிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் நல்லிணக்க அமைச்சின் ஊடாக 25ஆயிரம் வீடுகள் அமைக்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது.
மீள்குடியேற்ற அமைச்சு அமைக்கவுள்ளன என்று கூறப்படும் கல்வீடுகள், கொங்கிறீட் பிளேட்டுகளால் கட்டப்படும் வீடுகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.