யாழ்ப்பாணம், நீர்வேலி பிரதேசத்தில் கையடக்க தொலைபேசி வாங்கி தர மறுத்தமையினால் மாணவன் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கையடக்க தொலைபேசி வாங்கித் தருமாறு கோரிய மாணவன், அது வாங்கித் தரப்படாமையினால் தவறான முடிவு எடுத்து உயிரிழந்துள்ளதாக மரண விசாரணையில் தெரியவந்துள்ளது.
நீர்வேலி தெற்கைச் சேர்ந்த கிருஸ்ணபிள்ளை கோபு (வயது-17) என்ற மாணவனே உயிரிழந்துள்ளார். இவர் குடும்பத்தில் ஒரேயொரு பிள்ளை என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 25ஆம் திகதி தாயாரிடம் லட்ச ரூபா பெறுமதியான கையடக்க தொலைபேசியை வாங்கித் தருமாறு கோரியுள்ளார். தாய் அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார். அடுத்த நாளும் அதனைக் கோரியுள்ளார்.
தாயார் மறுத்துள்ளார். பின்னர் அறைக்குள் சென்று கதவை மூடியுள்ளார். சிறிது நேரத்தில் தாயார் கதவை தட்டியபோதும் கதவு திறக்கப்படவில்லை. சந்தேகமடைந்த தயார் ஜன்னல் ஊடாகப் பார்த்தபோது, மகன் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.
உடனடியாக கயிற்றை அறுத்து, அவரை நோயாளர்காவு வண்டி ஊடாக மருத்துவனைக்கு எடுத்துச் சென்றபோதும், அவர் உயிரிழந்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவின் குடும்பத்தார் கமத்தொழிலில் ஈடுபடுகின்றனர் என்றும், உயிரிழந்த மாணவனிடம் ஏற்கனவே இரண்டு அலைபேசிகள் உள்ளதாகவும், மரண விசாரணையின்போது தெரியவந்துள்ளது.மரண விசாரணையை, திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார்.