வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சர் க.சர்வேஸ்வரனை பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர் கொழும்பில் உள்ள பொலிஸ் தலைமையகத்தில் உள்ள 4ம் மாடிக்கு விசாரணைக்கு சமூகமளிக்க அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் செவ்வாய்கிழமை வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சின் அலுவலகத்திற்கு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவின் உறுப்பினர்கள் இருவர் சென்று, கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சர் க.பரமேஸ்வரனை எதிர்வரும் ஜீன் மாதம் 5ம் திகதி கொழும்பு பொலிஸ் தலைமையகத்திற்கு விசாரணைக்கு வருகை தருமாறு கோரும் அழைப்பாணையுடன் வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
எனினும் கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சர் க.பரமேஸ்வரன் என எவருமில்லையென தெரிவித்த அமைச்சின் அதிகாரிகள் கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி.க.சர்வேஸ்வரனை சந்திக்க அவர்களிற்கு அனுமதித்துள்ளனர்.
எவரது ஒப்பமும் அற்று கைகளால் எழுதப்பட்டு, யாரால் எழுதப்பட்டது அல்லது யாருக்கு எழுதப்பட்டதென்ற எந்தவொரு தகவலுமற்றதாக போட்டோபிரதி எடுக்கப்பட்ட ஆவணமொன்றை கையளித்த அவர்கள் விசாரணையொன்றிற்காக கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி.க.சர்வேஸ்வரனை கொழும்பு காவல்துறை தலைமையகத்திற்கு விசாரணைக்கு வருகை தருமாறு அழைப்புவிடுத்திருந்தனர்.
மொட்டைக்கடிதப்பாணியில் அமைந்திருந்த குறித்த கடிதத்தை ஏற்க மறுத்த அவர் எதிர்வரும் ஜீன் 5ம் திகதி முதல் 14ம் திகதி வரை ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் தனக்கு அவ்வாறு சமூகமளிக்க நேரமில்லையெனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இப்பிரிவினர் சட்டரீதியாக உத்தியோகபூர்வமாக கடிதங்களை கையாளது மொட்டைக்கடித பாணியில் அனுப்பிவைப்பதும் எதற்காகவெனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை ஏற்பாடு செய்த முன்னாள் போராளிகள் இருவரை பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசார் விசாரணைக்கு அழைத்தமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.
பிரதமர் அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்திருந்த நிலையில் , வடமாகாண கல்வி அமைச்சரை விசாரணைக்கு வருமாறு பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசார் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தன்று வடமாகாண பாடசாலைகளில் வடமாகாண கொடியினை அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறு கல்வி அமைச்சர் க. சர்வேஸ்வரன் கோரி இருந்தார். அதற்கு தெற்கு அரசியல்வாதிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.