சிவகங்கை அருகே கச்சநத்தம் கிராமத்தில் நடந்த கொலை சம்பவம் தொடர்பாக, கவனக்குறைவாக இருந்த 2 காவலர்கள்பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய ஆதி திராவிடர் ஆணைய துணைத் தலைவர் முருகன் கூறியுள்ளார்.
மானாமதுரை அருகே கச்சநத்தம் கிராம திருவிழாவில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக கடந்த 28ம் தேதி, ஆவரங்காடு கிராமத்தின் வழியே இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்களை, கச்சநத்தம் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும், கச்சநத்தம் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஆவரங்காடு கிராமத்தில் உள்ள வீடுகளில் புகுந்து சிலரை தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் ஆறுமுகம், மருது பாண்டி என்ற இருவரும் படுகொலை செய்யப்பட்டதுடன், 10 க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பெற்று வருகின்றனர்.
இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் பலரும் போராடி வாழ்ந்த நிலையில், மக்களின் கோரிக்கையின்படி கச்சநத்தம் பகுதியை வன்கொடுமை பகுதியாக அறிவிக்க மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தி உள்ளோம் என தேசிய ஆதி திராவிடர்ஆணைய துணைத் தலைவர் முருகன் கூறியுள்ளார். மேலும், குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைஅமைக்கப்பட்டுள்ளதாகவும், கவனக்குறைவாக இருந்த பழையனூர் காவல்நிலைய சார்பு ஆய்வாளர்கள் செல்வம், ஜானகிராமன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக 4 தனிப்படை போலீஸார் 7 பேரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.