பிரதான செய்திகள்:பிரித்தானியாவில் நாடு கடத்தலை எதிர்நோக்கியுள்ள இலங்கை தமிழ் இளைஞர் ஒருவரை அந்நாட்டு குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
லோகராஜ் அருளானந்தம் என்ற நபரே இவ்வாறு நாடுகடத்தப்படும் ஆபத்தை எதிர்நோக்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் ஏனைய புலம்பெயர் அமைப்புக்களுடன் இணைந்து லோகராஜ் அருளானந்தம் செயற்பட்டு வந்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் தமிழ் இனப்படுகொலை, தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கெதிராகவும், தொடர்ந்தும் அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வன்முறைகள், கொலைகள், கடத்தல்கள், நில அபகரிப்பு போன்ற நடவடிக்கைகளை சர்வதேசத்திற்கு எடுத்து கூறும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை இவர் முன்னெடுத்திருந்தார்.
மேலும், இலங்கை அரசினால் திட்டமிட்ட முறையில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கு நீதிகோரி பன்னாட்டு நீதி விசாரணைப் பொறிமுறையை கோரி பல்வேறுபட்ட புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் இணைந்து தமிழின சுயநிர்ணய உரிமைக்காக இவர் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், இவர் பிரித்தானியாவில் தஞ்சம் கோரியிருந்த நிலையில் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு கடந்த ஜனவரி 17ம் திகதி முதல் பிரித்தானியாவின் மேற்கு சசெக்ஸ் பகுதியில் அமைந்துள்ள டின்ஸ்லி ஹவுஸ் குடிவரவு நீக்கம் மையம் குடிவரவுத் திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.