ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள கருத்துக்கள் மூலம் நாட்டிற்குள் அரசாங்கம் இல்லை என்பது உறுதியாகி இருப்பதால், உடனடியாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இப்படியான ஸ்திரமற்ற அரசாங்கத்தினால் முன்னோக்கி செல்ல முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பு – விஜேராம வீதியில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்வில் வைத்தே முன்னாள் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். இந்த நிகழ்வில் முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள், இஸ்லாமிய மத தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி,
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நான், ஹெலிக்கொப்டரில் மெதமுலனவுக்கு சென்றதை தான் அறியவில்லை என ஜனாதிபதி கூறுகிறார்.
அதனால், எனக்கு ஹெலிக்கொப்டரை பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் நான் அலரி மாளிகையில் இருந்து எதனையும் எடுத்துச் செல்லவில்லை.
எனினும் எனது பாதுகாப்பு தலைமை அதிகாரி தற்போதைய ஜனாதிபதியுடன் இணைந்து கொண்டார் என முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.