இன்று நான் இந்த நிகழ்வுக்கு வருவதற்கு முன்னர், நான் வரப்போவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டதாக அறியக் கிடைத்தது. இந்த நிகழ்வில் கலந்துகொள்ளும்படி எனக்கு எவ்வித அழைப்போ, அறிவிப்போ கிடைக்கவில்லை. இந்த நாட்டில் ஏனைய விடயங்களும் இவ்வாறுதான் இடம்பெறுகின்றன.
இந்த இலங்கை மன்றத்தின் தலைவரை நான்தான் நியமித்தேன். இலங்கை மன்றத்தில் விசேட நிகழ்வுகள் இடம்பெறுகின்றபோது அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அதுபற்றி எனக்கு தெரியப்படுத்துவார்.
அவர், ‘‘நாளைய தினம் சோபித தேரரின் நினைவுதின நிகழ்வு நடைபெறுகின்றது. அதில் கலந்துகொள்ள நீங்கள் வருகிறீர்களா’’ என என்னிடம் கேட்டார். அதற்கு நான் ‘நாளையா? எத்தனை மணிக்கு?’ என்று கேட்டேன்.
‘மூன்று மணிக்கு’ என்று கூறினார் அத்தோடு எனது பெயரும் அழைப்பிதழில் இருப்பதாகக் கூறினார். அதற்கு நான் இதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது எனக் கூறினேன்.
நான் எனது தனிப்பட்ட செயலாளரிடமும் சோபித தேரரின் நினைவு தின விழாவுக்கு எனக்கு அழைப்பு வந்ததா எனக் கேட்டேன். அப்படி எதுவும் வரவில்லை எனக் கூறினார்.
அதன் பின்னர் நான் ரவியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நாளை அவ்வாறானதொரு நிகழ்வு இருக்கின்றதா எனக் கேட்டேன். அவ்வாறானதொரு நிகழ்வு இருப்பதாக நான் வெளியிலிருந்து கேள்விப்பட்டேன் என்றும், எனக்கு அழைப்பு கிடைக்கவில்லை என்றும் அவரிடம் கூறினேன்.
அதன் பின்னர் அவர் அதுபற்றித் தேடிப்பார்த்திருப்பார் என நினைக்கி றேன். சற்று நேரத்தின் பின்னர் மீண்டும் என்னை தொடர்பு கொண்ட அவர், ‘‘சேர் , தவறு நடந்துவிட்டது. எவராவது உங்களுக்கு அழைப்பு விடுத்திருப் பார்கள் என எல்லோரும் நினைத்திருக்கிறார்கள்.
ஆனால் எவரும் உங்களுக்கான அழைப்பை கொடுத்திருக்கவில்லை’’ என்றார்.
தேரர் அவர்களே, நீங்கள் உங்களது உரையின்போது நான் வரப்போவதில்லை எனக் கேள்விப்பட்டு மனம் வருந்தியதாகக் கூறினீர்கள். அதற்கு காரணம், நீங்கள் கூட இவர் வருவார் அப்படி வந்தால் கூற வேண்டியவற்றை அழுத்தம் திருத்தமாக கூறிவிட வேண்டும் என்று நினைத்திருப்பீர்கள்.
அப்படி நினைத்த உங்களுக்கு நான் வரவில்லை என்ற செய்தி கிடைத்ததும் மன வருத்தம் ஏற்பட்டிருக்கக்கூடும்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பை நான் ஏற்ற பின்னர் தான் நிலைமை மோசமடைந்தது என நீங்கள் கூறினீர்கள். இந்த நிலமைகள் எவ்வாறு மோசமடைந்தன என்பது பற்றி மிகத் தெளிவாக என்னால் கூற முடியும்.
தேரர் அவர்களுக்கு மட்டுமல்ல, என்னுடன் கலந்துரையாடவோ விவாதிக்கவோ, எவரேனும் முன்வரு வார்களாக இருந்தால், அவர்களிடமும் என்ன நடந்தது என்பதைப் பற்றி என்னால் கூற முடியும்.
உயர்ந்த சமயப் பற்றும் தேசப்பற்றும் கொண்டிருந்தவர சோபித தேரர்
சோபித தேரர் அவர்களுடனான எனது உறவு அவர் காலமாவதற்கு 25 வருடங்களுக்கு முன்பிருந்தே இருந்து வந்தது. குறிப்பாக போர் இடம்பெற்ற காலத்தின்போது தூர பிரதேச கிராமங்களுக்குச் சென்று மக்களின் சுக துக்கங்களை விசாரித்து, அவர்களுக்குத் தேவையான உணவுகளைப் பெற்றுக்கொடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர் பெரும் சேவையை ஆற்றினார்.
இதற்காக அவர் திருகோணமலை, மட்டக்களப்பு, அநுராதபுரம் ஆகிய பிரதேசங்களுக்குச் சென்று வந்தார். அந்தப் பிரதேசங்களை நான் ஒருபோதும் எல்லைப்புறக் கிராமங்கள் என்று கூற விரும்ப வில்லை. அப்பிரதேசங்களுக்குத் தேரர் அவர்கள் சென்று வந்தார்.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நானும் அவற்றில் பங்கெடுத்துக்கொண்டேன். தேரர் அவர்களது நிகழ்ச்சித்திட்டங்களுக்கு நான் உதவியிருக்கிறேன்.
தேரர் அவர்கள் என்னை நன்றாகத் தெரிந்து வைத்திருந்தார். தேரர் அவர்கள் பொலன்னறுவைக்கு செல்கின்றபோது பொலன்னறுவையில் உள்ள இசிபத்தனாராம விகாரையிலேயே இரவைக் கழிப்பார்.
தேரர் அவர்கள் மீது நான் மிகுந்த மதிப்பு வைத்துள்ளேன். அது என்னை பொது வேட்பாளராகத் தெரிவு செய்ததன் பின்னர் ஏற்பட்ட ஒன்றல்ல. மாதுளுவாவே சோபித தேரர் அவர்கள் மிகச் சிறந்த பண்பாடும், உயர்ந்த சமயப் பற்றும், தேசப்பற்றும் மிக்க தேரராவார்.
சபாநாயகர் அவர்களே, நான் இன்று இந்த இடத்துக்கு திடீரென வருகை தந்தபோதும், எனக்கு ஒரு உரை இருக்குமென்று நான் எண்ணினேன். எனவே நான் வரும்போது நான் இன்றைய ‘டெயிலிமிரர்’ பத்திரிகையை எடுத்துக்கொண்டு வந்தேன்.
நான் காலை ஐந்து மணிக்குப் பத்திரிகைகளை படிப்பேன். இன்று ‘டெயிலி மிரர்’ பத்திரிகையில் மஹதீர் முஹமதின் படத்தை இடது புறமும், எனது படத்தை வலது புறமும் பிரசுரித்து, மஹதீர் முஹமத் ஆட்சிக்கு வந்து ஐந்து நாள்களில் செய்த வேலைகள் என சில விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.
எனது படத்தின் கீழ் மூன்று வருடங்கள்? (Three Years?) என கேள்விக் குறியொன்று இடப்பட்டிருந்தது. மலேசியாவில் முதல் ஐந்து நாள்களில் ஒன்பது அமைச்சர்களைக் கைது செய்ததாகவும் முன்னாள் பிரதமரும் அவரது குடும்பத்தினரும் வெளியேறிச் செல்ல முடியாதவாறு விமான நிலையம் மூடப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. முன்னாள் பிரதமர் நஜீப் வெளியேறிச் செல்ல முடியாத வகையில் சட்டம் போடப்பட்டது உண்மை.
அடுத்தது 144 வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டதாகவும், ஐம்பது நீதிபதி கள் கைது செய்யப்பட்டதாகவும், பிரசுரிக்கப்பட்டி ருந்தது. இந்தப் பத்திரிகையைப் பார்த்துவிட்டு நான் மலேசியாவில் இருக்கும் எமது தூதுவரிடம் இது பற்றி வின வினேன்.
மலேசியாவின் மஹதிர் முஹமதின் கட்சி சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் உறவுகளைப் பேணி வந்த கட்சியாகும்.
எனவே, நான் அந்தக் கட்சியில் பணி புரிகின்றவர்களையும் அறிவேன். நான் அவர்களில் ஒருவருடனும் காலையில் தொடர்பு கொண்டு இதன் உண்மைத்தன்மைபற்றி வினவினேன்.
அனைவருமே அந்தச் செய்தி அப்பட்டமான பொய் எனக் கூறினர். கடந்த சில தினங்களாக சமூக ஊடகங்களில் இந்தச் செய்தி பெரிதுபடுத்திக் காட்டப்பட்டிருக்கின்றது.
மஹதீர் செய்ததை ஏன் இவரால் செய்ய முடியாது எனக் கேட்கப்படுகிறது. முன்னாள் பிரதமர் நஜீபிடம் ஒரு முழு நாள் விசாரணை இடம்பெற்றது. எனினும் அவர் இன்னும் கைதுசெய்யப்படவில்லை. பாருங்கள், ஐம்பது நீதிபதிகள் கைது செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிடப் பிட்டுள்ளது.
‘டெயிலி மிரர்’ பத்திரிகை நான் மிகவும் மதிக்கின்ற ஒரு பத்திரிகை என்றாலும், இந்தச் செய்தி எவ்வளவு பொய்யானது. இதை யிட்டு நான் கவலையடைகிறேன்.
இது மலேசியாவுக்கும் நல்லதல்ல. ஐந்து நாள்களில் இந்த விடயங்களைச் செய்ய முடியுமானால் இந்த நாடு ஜனநாயக நாடாக இருக்க முடியாது. ஐந்து நாள்களில் இதனைச் செய்ய முடியுமென்றால் அது சட்டங்கள் இல்லாத நாடாக இருக்க வேண்டும்.
ஐம்பது நீதிபதிகளைக் கைது செய்யவும் ஒன்பது அமைச்சர்களைக் கைது செய்யவும், 144 முன்னணி வர்த்தகர்களைக் கைது செய்யவும் முடிமென்றால் அது சட்டமில்லாத நாடாகும்.
அரசின் கடந்த மூன்றரை வருடகால சேவை குறித்து விமர்சித்து வருகின்றனர் எதிரணியினர்
நாங்கள் கடந்த மூன்றரை வருட காலப்பகுதியில் சிலரைக் கைது செய்திருக்கிறோம். வழக்குத் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றோம். நான் ஏன் இதனைச் செய்யவில்லை என்று கேட்கிறார்கள். நான் இதற்குப் பதிலளிக்க வேண்டும்.
சங்கைக் குரிய சோபித தேரரின் நோக்கங்களை மதிக்கின்றவன் என்ற வகையில், அவரது தத்துவங்களைப் பின்பற்றுபவன் என்ற வகையில், அந்தத் தத்துவங்கள் கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென்ற உறுதியான கொள்கையில் இருக்கின்றவன் என்ற வகையிலும், நான் இதற்குப் பதிலளிக்க வேண்டும்.
சபாநாயகர் அவர்களே, 2015 ஜனவரி மாதம் 08 ஆம் திகதி அரச தலைவர் தேர்தலை நடத்தி, ஜனவரி 09ஆம் திகதி 2.00 மணிக்கு தான் தேர்தல் ஆணையாளர் எங்களை அழைத்து போட்டியிட்ட கட்சிகளின் பெறுபேறுகளை வெளியிட்டார் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
அந்த நேரத்தில் மகிந்த ராஜபக்சவும் அவருடன் இருந்தவர்களும் அனைத்துப் பொருள்களையும் எடுத்துக்கொண்டு செல்கிறார்கள்.
மகிந்த ராஜபக்சவுக்குக் கொண்டுவரப்பட்டிருந்த பாதுகாப்பு வாகனம் ஜனாதிபதிக்குரியது ஆகும். அவருக்குத் தேவை யான வகையில் புதிய வாகனங்கள் இருந்தன.
அவருக்குத் தேவையான அனைத்தையும் எடுத்துச் சென்றார். ஜனாதிபதியின் பாதுகாப்புக்கென கொண்டு வரப்பட்டிருந்த நவீன தொழில்நுட்ப உபகரணம் ஜனாதிபதி இருக்கின்ற இடத்தி லிருந்து 100 மீற்றர் தூரத்தில் உள்ள எந்தவொரு வெடி பொருளையும் கண்டறியக்கூடிய அந்த உபகரணமும், அந்தக் காரில் தான் இருந்தது.
இன்றும் எனக்கு அது கிடையாது. புதிய வாகனங்களில் இரண்டு வாகனங்கள் மட்டுமே மீதமாக இருந்தன. எனது பாதுகாப்பு அதிகாரிகள் ‘சேர், பிரதமரின் ஆள்கள் வந்து இருக்கிறார்கள்.
பிரதமருக்கு வாகனங்கள் இல்லை என இந்த இரண்டு வாகனங்களைக் கேட்கின்றனர்’ என்றனர். முன்னர் பதவியிலி ருந்தவர் கொண்டுசென்ற வாகனங்களுக்கு மேலதிகமாக இரண்டு புதிய வாகனங்களே எனக்காக எஞ்சியிருந்தன.
‘இவற்றைத் தானே பிரதமர் கேட்கின்றார். பரவாயில்லை, அவற்றைக் கொடுத்துவிடுங்கள்’ என நான் கூறினேன். அந்த இரு புதிய வாகனங்களை பிரதமருக்கு கொடுத்துவிட்டு கடந்த இரண்டரை வருடங்களாக நான் பழைய வாகனங்களையே பாவித்து வந்தேன்.
மகிந்த ராஜபக்ச பாவிக்க முடியாது என ஒதுக்கியிருந்த வாகனங்களையே நான் பாவித்தேன். நிதியமைச்சர் என்ற வகையில் ரவியே அதற்குச் சாட்சி. இரண்டரை வருடங்களின் பின்னரே எனது பாவனைக்கு வாகனங்கள் இல்லாததால் நிதியமைச்சிலிருந்து பணம் பெற்று எனக்கு இரண்டு கார்களைக் கொள்வனவு செய்தேன்.
தங்காலைக்குச் செல்ல மகிந்தவுக்கு யார் ஹெலிகொப்டர் கொடுத்தார்கள்? நானா கொடுத்தேன்? இவற்றுக்குப் பதில் கூறவேண்டியவர்கள் கூறவேண்டும். இன்று நான் இது தொடர்பாக மலேசியாவுக்குக் கதைத்துத் தக வல்களை அறிந்துகொண்டதன் பின்னர் விமா னப்படைத் தளபதியுடன் கதைத்தேன்.
தேர்தல் பெறுபேறுகள் வெளியானதன் பின்னர் மகிந்த ராஜபக்சவுக்கு தங்காலைக்குச் செல்ல ஹெலிகொப்டர் கொடுத்தீர்களா? அதற்கான அறிவுறுத்தல்களை வழங்கியது யார்? என நான் அவரிடம் கேட்டேன்.
இப்போதுள்ள விமானப் படைத்தளபதி அப்போது இரண்டாவது நிலையில் இருந்தார். ஜனாதிபதி கூறியதாக அந்த குறித்த நபர் கூறியதாக அவர் என்னிடம் கூறினார். என்னிடம் அதைப்பற்றி தொலைபேசியில் கூட விசாரிக்கவில்லை.
பொது வேட்பாளராக நிறுத்த எவரும் கிடைக்காமையாலேயே என்னைத் தேர்ந்தெடுத்து நிறுத்தினர்
தேரரவர்களே, நான் சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தைக் கையேற்றதாலேயே அரசாங்கம் இல்லாமல் போய்விட்டது என சிலர் கூறுகின்றனர்.
அந்தச் சந்தர்ப்பத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் 47 ஆசனங்கள் மாத்திரமே காணப்பட்டன.
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும் பான்மை, 142 ஆசனங்களைக் கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிடமும், 127 ஆசனங்களைக் கொண்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியிடமுமே காணப்பட்டது.
சபாநாயகரே 100 நாள் வேலைத்திட்டத்தை யார் செய்தார்கள் என எனக்குத் தெரியாது. என்னைப் பொது வேட்பாளராகத் தேர்ந்தெடுத்தமைக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்.
இன்றும் நன்றியுடையவனாக இருக்கிறேன். ஆனால் அதற்கும் தற்போது சிலர் ‘இவர் இல்லை. வேறு யாரையாவது போட்டியிட வைத்திருந்தாலும் வெற்றி பெற்றிருக்கலாம்’ எனக் கூறுகின்றனர்.
அப்படி போட்டியிட்டிருக்கலாமே? எதற்காக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுத்தார்கள். அவ்வாறு போட்டியிட எவரும் இல்லாத நிலையிலேயே என்னைத் தேர்ந்தெடுத்தார்கள் என அவர்களுக்கு நான் கூற விரும்புகிறேன்.
அதிக அதிகாரங்களுடன் ராஜபக்ச குடும்பத் தினர் ஆட்சி செய்தபோது நாட்டில் காணப்பட்ட மக்களே விரும்பாத ஏகாதிபத்திய ஆட்சி, அதன் தீவிரத்தன்மை, காணாமல்போதல்கள், பெரிய லஞ்ச ஊழல் மோசடி போன்றவை இடம்பெற்ற வேளையிலேயே நான் தைரியமாக வெளிப்பட்டேன்.
நான் அரச குடும்பத் தைச் சேர்ந்தவன் அல்ல. பெரும் செல்வந்த குடும்பத்தைச் சேர்ந்தவனும் அல்ல. அரசியல் பரம்பரையும் அல்ல. ஆயினும் நான் அர்ப்பணிப்புடன் செயற்பட்டேன்.
தற்போது அதனைப் பலரும் மறந்துவிட்டனர். பாராளுமன்றத்தின் அதிகாரம் இல்லாமல் 100 நாள் வேலைத் திட்டத்தை எவ்வாறு செய்ய முடியும். யாராவது எனக்குப் பதில் கூறுங்கள்.
நாடாளுமன்றத்தில் 47 ஆசனங்களை வைத்துக்கொண்டு பிரதமர் ரணில் விக்கிரசிங்க 100 நாள் வேலைத்திட்டத்தைத் தயாரித்தார். தேர்தல் ஜனவரி 8ஆம் திகதி. 9ஆம் திகதி அவர் பதவியேற்றார். 10ஆம் 11ஆம் திகதியளவில் 100 நாள் திட்டத்தைத் தயாரித்து புத்தகமாக அச்சிட்டுக் கொடுத்தார்கள்.
19ஆம் திருத்தச் சட்டமும் அதில் அடங்கியிருந்தது. உலக வரலாற்றிலேயே எந்தப் பாராளுமன்றத்தில் இவ்வாறு 225 பேர் இருக்கையில் 47 பேரின் தேவைக்காக அரசமைப்புத் திருத்தத்தை மேற்கொள்ள முடியும்? 142 பேர் எதிரானவர்கள்.
நான் பதவியேற்றவுடனேயே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பதவியேற்றார். அடுத்த வாரமே 47 பேரைக் கொண்ட கட்சியை சேர்ந்தவர் பிரதமராக இருக்கின்றார். நாங்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணை யைக் கொண்டு வருவோம் என எதிர்த் தரப்பினர் கூறினார்கள்.
100 நாள் வேலைத்திட்டத்தினால் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியாது போனது. இதனைத் தயாரித்தவர்கள் யார் எனத் தெரியாது. அதுவே மிகப்பெரிய முட்டாள்தனம்.
உண்மையில் நான் பதவியேற்ற அன்றைய தினம் இரவே நாடாளுமன்றத்தைக் கலைக்கக்கூடியவாறு அந்த திட்டத்தைத் தயாரிக்க வேண்டும் என நான் அவர் களுக்குக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். அன்றே பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்தியிருக்க வேண்டும்.
அதன் பின்னர் அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களின் வரவு செலவுத் திட்டப் பிரேரணை வெளிவந்தது. உங்களால் 100 நாள் செயற்றிட்டத்தின் வரவு செலவுத் திட்டத்தை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவின்றி நாடாளுமன்றத்தில் அங்கீகரித்திருக்க முடியுமா?. 19ஆவது திருத்தத்தை அங்கீகரித்திருக்க முடியுமா?.
19ஆவது திருத்தச்சட்டம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு மாலை 5 மணிக்கே வாக்கெடுப்பு நடத்தத் தீர்மானிக் கப்பட்டிருந்தது. மாலை 5 மணியாகியும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிடமி ருந்து சரியான முடிவு எதுவும் கிடைக்கப் பெறவில்லை.
142 பேர் மட்டுமே மறுபுறத்தில் இருந் தனர். நான் அந்த இரண்டு நாளும் நாடாளுமன்றத்திலேயே இருந்தேன். பொதுமக்கள் ஐக்கிய முன்னணியின் உறுப்பினர்கள் உணவருந்தும்போதும் ஓய்வெடுக்கும்போதும் அவர்களைச் சந்தித்தேன்.
அவர்களது சிகிச்சை நிலையங்களுக்குச் சென்றேன். வீடுகளுக்குக் கூடச் சென்றேன். சபாநாயகர் அவர்களே, அவ்வாறெல்லாம் சென்று உரையாடியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சம்மதம் கிடைக்காமையினால், நாம் மாலை 5 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாக்கெடுப்பை மாலை 7 மணிக்கு ஒத்தி வைத்தோம். நீங்கள் அறிக்கைகளை வாசித்து பாருங்கள்.
ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே கூட்டு அரசு நிறுவப்பட்டது
சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை நான் பொறுப்பேற்றதாலேயே இவற்றையெல்லாம் செய்ய முடிந்தது. நாம் தயாரித்த ஒப்பந்தத்தில் கூட்டரசு எனத் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இரண்டு பிரதான கட்சிகளான சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து நிர்வகிக்கும் அரசாங்கமாகும். கட்சியில்லாமல் உறுப்பினர்கள் வருவார்கள். கட்சியிருக்கும் இடத்திலேயே அரசாங்க தரப்பு உறுப்பினர்களும் இருக்க வேண்டும்.
ஏனைய கட்சியிலுள்ளவர்கள் அப்படி வருவார்களா?. 19ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தின் 225 பேரில் 215 பேரின் வாக்குளை நாம் பெற்றோம். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 142 பேரில் சரத் வீரசேகர ஆதர வளிக்கவில்லை. ஏனைய 141 வாக்குகளையும் பெற்றோம்.
பல ஆண்டுகளாக சுகாதார அமைச்சர் என்ற வகையில் நான் போராடிக்கொண்டிருந்த ஒளடத சட்டத்தை நாடாளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றினோம். ரவியின் வரவு செலவுத் திட்டத்தை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவின்றி அங்கீகரிக்க முடியாது.
100 நாள் திட்டத்தை 100 நாள்களுக்குள் நிறை வேற்ற முடியாது போனது. 9ஆம் திகதி அரச தலைவராகப் பதவியேற்ற நானும் தலைமை அமைச்சராகப் பதவியேற்ற ரணிலும் இணைந்து ஆகஸ்ட் 15 வரை தேர்தலை நடத்த முடியாமற் போனது. 8ஆம் மாதம் நாடாளுமன்றத்தைக் கலைத்ததன் பின்னர் விரைவில் தேர்தலை நடத்துமாறும் கோரப்பட்டது.
மத்திய வங்கி சம்பவத்துடன் தொடர்புடைய பாராளுமன்றக் குழுவைக் கலைக்க வேண்டும் என்பதாலும், அதனைச் செயலிழக்கச் செய்ய வேண்டும் என்பதாலுமே பாராளு மன்றத்தைக் கலைத்தார்கள் எனவும் அப்போது குற்றஞ் சாட்டப்பட்டது.
இந்தக்காலப்பகுதியில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் எத்தனை சட்டங்கள் நிறைவேற்றப் பட்டன? வரவு செலவுத் திட்டம் நிறை வேற்றப்பட்டது? 19ஆவது திருத்தம் நிறைவேற்றப் பட்டது. மனித உரிமைகள் பற்றிய சர்வதேச அறிக்கையில் இலங்கையில் மனித உரிமைகள் ஆணைக்குழு இன்று சிறந்த உலகத் தரத் துடன் செயற்படுவதாக குறிப்பிடப் பட்டிருந்தது.
19ஆம் திருத்தத்தினூடாகவே அவற்றையெல்லாம் எம்மால் நிறைவேற்ற முடிந்தது.
சுதந்திரக்கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றதன் மூலமே பலவற்றை நிறைவேற்ற முடிந்தது
சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப்பொறுப்பை நான் ஏற்றிருக்காவிடின் இவற்றையெல்லாம் நிறைவேற்ற முடியாது போயிருக்கும். அதனை நான் பலவந்தமாகக் கேட ்டுப் பெறவில்லை. சிலர் நான் எடுத்துக்கொண் டேன் எனக் கூறுகின்றனர்.
கட்சி உறுப்பினர்கள் அனைவரும் மகிந்த ராஜபக்ச தலைமைப்பொறுப்பைக் கையளிக்க தயார். நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள் எனக் கூறினார் கள். 47 ஆசனங்களைச் கொண்டு எவ்வாறு அரசாங்கத்தை கொண்டு செல்வது என நான் யோசித்தேன்.
47 வாக்குகளை வைத்துக் கொண்டு எவ்வாறு சட்டங்களை நிறைவேற்றலாம்? 19ஆவது திருத்தத்தை நிறைவேற்ற லாம்? நிதியமைச்சரின் வரவு செலவு திட்டத்தை எவ்வாறு நிறைவேற்றலாம்? இவை எதனையும் செய்ய முடியாது.
சிறி லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் அமைச்சரவையில் இருப்பதால் நாட்டுக்குப் பொருத்தமற்ற எத்தனை விடயங்களைத் தவிர்த்தேன் என்பதை நான் அறிவேன். அமைச்சரவையில் இருந்த ரவிக்கும் தலதாவுக்கும் ஞாபகமிருக்குமென நான் கருதுகிறேன்.
நாட்டிலுள்ள சகல அரச வங்கிகளின் பணத்தையும் தனியார் வங்கிகளுக்கு விடுவிக்க அமைச்சரவைப் பத்திரமொன்று கொண்டுவரப்பட்டது. நான் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால், 3 மாதங்கள் வரை அது அமைச்சரவையிலேயே தாமதிக்க வைக்கப்பட்டது. நான் அதனை ஏற்றுக்கொள்ளவேயில்லை.
அந்த யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பின், இன்று இலங்கை வங்கி இருந்திருக்க வாய்ப்பே இல்லை. மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி மற்றும் அரச ஈட்டு முதலீட்டு வங்கி ஆகியனவும் இல்லாது போயிருக்கும். தனியார் வங்கிகளே காணப்படும். என்னால் இதுபோன்ற பல விடயங்களை குறிப்பிட முடியும்.
1967ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமே நான் சிறி லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டேன். 1967ஆம் ஆண்டு டிசம்பர் மாதத் தில் சாதாரண தரம் எழுதும்போதே கட்சியோடு இணைந்து கொண்டேன். அப்போது எனக்கு 16 வயது. அப்போது முதல் சுதந்திரக் கட்சியில் இருந்ததால் 2014ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் திகதி பொது வேட்பாளராகப் போட்டியிட, ராஜபக்ச அரசாங்கத்திலிருந்து வெளியேறிய போது நான் 47 வருட கால அரசியல் வாழ்க்கையைக் கொண்ட முதிர்ச்சியான அரசியல்வாதியாகவே இருந்தேன்.
இந்த மூன்றரை வருடகால நிகழ்வுகளை நீங்கள் அறிவீர்கள். ஆனால் எனது சுயாதீனத்தன்மை, அறிவு, நேர்மை என்பவற்றோடு நான் கட்டியெழுப்பிக்கொண்ட அரசியல் வாழ்க்கை இல்லாவிட்டால் , ஒருபோதும் என்னைப்போன்ற ஒரு குடும்பத்தில் பிறந்தவர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வாய்ப்பே இல்லை.
எமது நாட்டை ஆட்சிசெய்த 6 ஜனாதிபதிகளுள் ஜனாதிபதி பிரேமதாச மாத்திரமே சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆனால் அவரும் நகரப் பிரதேசத்தில் வாழ்ந்த, எனது குடும்பத்தை விட பொருளாதார நிலையில் சிறப்பாகக் காணப்பட்ட குடும்பத்தை சார்ந்தவராவார்.
பொது வேட்பாளரை தேர்ந்தெடுத்து அரசாங்கத்தை அமைத்து மத்திய வங்கியை கொள்ளையிடுமாறு சோபித தேரர் கூறவில்லை. இந்த மூன்றரை வருடங்களைப் பற்றி நான் நிறைய விடயங்களைக் கூற வேண்டும். ஆனால் கூற விரும்பவில்லை. இதுபோல இன்னு மொரு சந்தர்ப்பம் கிடைத்தால் கூறுவேன்.
இந்த நாட்டை சிறந்தவொரு நாடாக மாற்ற, தூய்மையான நிர்வாகத்தை ஏற்படுத்த, நல்லாட்சி என்ற வாசகத்தை அதே கருத்துடன் செயற்படுத்த வேண்டும் என்ற நேர்மையான எண்ணத்துடன் வந்தவன் நான்.
ஆரம்பகாலம் முதலே அரசியலில் விசுவாசமாகவும் அர்ப்பணிப்புடனும் செயற் பட்டு வந்துள்ளேன்
சுகாதார அமைச்சராகவும், விவசாய அமைச்சராகவும், இருந்தபோது என்னால் இயன்றளவு பணத்தை சம்பாதித்திருக்க முடியும். அதற்கு முன்னரும் எத்தனை அமைச்சுப் பதவிகளை வகித்தேன். ஆனால் என்னைப் பற்றிய தவறான விடயங்கள் தற்போது பரப்பப்படுவதனால், நான் மிகுந்த கலலையடைகின்றேன்.
மக்கள் எதிர்பார்க்கும் எந்தவொரு வழக்கு விசாரணைகளும் இடம்பெறாததற்கு நானே காரணம் எனக் கூறுகின்றனர்.
சபாநாயகர் அவர்களே, அமைச்சர் ஏக்கநாயக்க குருணாகலையில் இருந்தபோது வாகனம் வழங்கப்பட்டது தொடர்பாக விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என இந்த அரசாங்கத்திடம் நாட்டு மக்கள் எதிர்பார்க்கவில்லை.
பிரியங்கர ஜயரத்னவின் மகளுக்கு நியமனம் வழங்கப்பட்டதால் அவரை நீதிமன்றத்திற்கு அழைத்து விசாரணை செய்ய வேண்டும் என எதிர்பார்க்கவில்லை.
அமைச்சர் பௌசி ஒரு அமைச்சிலிருந்து மற்றுமொரு அமைச்சுக்கு செல்லும்போது வாகனத்தையும் எடுத்துச் சென்றார் என்ற விசாரணை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கவில்லை.
மக்கள் எதிர்பார்த்த விடயங்கள் எதுவும் நிறைவேறாதமைக்கு என்ன காரணம்? நான் இவற்றைக் கூறத் தேவையில்லை. முடியுமாயின் நீங்கள் அந்த மறைந்த விளையாட்டு வீரர் தாஜுதீனின் குடும்ப உறுப்பினர்களையும், அந்த முறைப்பாட்டிற்காக செயற்பட்ட வழக்கறிஞரையும் அழைத்து விசாரித்து பாருங்கள்.
நடந்தவற்றை அவர்கள் கூறுவார்கள்.
இத்தகைய பல்வேறு சம்பவங்களை கூறலாம். மக்கள் என்னை அரச தலைவராகத் தேர்ந்தெடுத்தபோது அவர்கள் கொண்டிருந்த எதிர்பார்ப்புக்களில் ஒரு பகுதி நிறைவேற்றப் பட்ட போதிலும் பெரும்பாலானவை நிறைவேற்றப்படவில்லை.
19ஆவது திருத்தம், ஒளடத சட்டம் போன்ற நாட்டுக்கு பொருத்தமான பல விடயங்கள் சிறிலங்கா சதந்திரக் கட்சியினால் நிறைவேற்றப்பட்டன. இன்று சகல நாடுகளின் தலைவர்களுடனும், அரசாங்கங்களுடனும் முன்னொருபோதும் இல்லாத வகையில் நட்புடன் செயற்படக்கூடிய நிலை காணப்படுகின்றது.
இதற்கு எமது அர்ப்பணிப்பே காரணமாகும்.
இதற்காக நான் பெருமளவில் பாடுபட்டேன். அதிக அளவிலான அரச தலைவர்களைச் சந்தித்து நட்புறவைக் கட்டியெழுப்ப முயற்சித்தேன். அதனால் நாம் பல வெற்றிகளைப் பெற்றுள்ளோம். ஜனநாயகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
ஊடக சுதந்திரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தேவையான எல்லாப் பொய்களையும் கூறலாம். 3 வருடங்களாக என்ன செய்தீர்கள் என்று கூடக் கேட்கலாம்.
நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் விடயங்களை நிறைவேற்ற இன்றும் நான் தயாராக உள்ளேன்.
அவற்றை நிறைவேற்றுவதற்கு காணப்படும் தடைகள், அவதூறுகள், நன்மதிப்புக்கு பங்கம் விளைவித்தல் என்பவை தொடர்பாக 47 வருட கால அரசியல் வாழ்க்கையில் பெற்றுக்கொண்ட அரசியல் முதிர்ச்சி காரணமாக நான் குழப்பமடையாது காணப்படுகின்றேன்.
இன்று ஜனாதிபதி வேட்பாளர்கள் பற்றி பேச ஆரம்பித்துள்ளனர். நாட்டிற்கு இதனைவிட அதிக கொடுமைகளை இழைக்க முடியாது. தேர்தல் இடம்பெறப்போவது அடுத்த வருட இறுதியிலாகும்.
இன்று அரச தலைவர் வேட்பாளர்களைப் பெயரிட்டு பிரகடனம் செய்கின்றனர். இதனால் நாட்டின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படுகின்றது. தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருட காலம் இருக்கையில் நாட்டில் தேர்தல் பரபரப்பை ஏற்படுத்தி அரச உத்தியோகத்தர்களைச் செயற்படவிடாது, ஊடகங்களில் பல்வேறுபட்ட விடயங்களை வெளியிடுகின்றனர். இவை தொடர்பாக நாம் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும்.
ஆயினும் இந்த மூன்றரை வருட காலங்களாக இடம்பெற்றுவரும் தவறுகளைச் சரிசெய்ய வேண்டும். உண்மையான விடயங்களை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும். இந்த நிகழ்வில் கலந்துகொள்ள வாய்ப்புக் கிடைத்ததையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.
நான் இங்கு கூறிய விடயங்கள் தொடர்பாக மேலும் தகவல்களை பெற என்னோடு கலந்துரையாட விரும்புவர்களுக்கு என்னோடு கலந்துரையாடலில் ஈடுபட சந்தர்ப்பம் வழங்க நான் தயாராக உள்ளேன்.
நன்றி