கர்ப்பம் தரிப்பதில் சிக்கலை ஏற்படுத்தும் கருப்பை அகப்படலம் நோய் (எண்டோமெட்ரியாசிஸ்) 3 -ல் ஒரு பெண்ணுக்கு உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கர்ப்பம் தரிப்பதில் சிக்கலை ஏற்படுத்தும் கருப்பை அகப்படலம் நோய் (எண்டோமெட்ரியாசிஸ்) 3 -ல் ஒரு பெண்ணுக்கு உள்ளதாக கூறப்படுகிறது. உலகெங்கும் 8.9 கோடி இளம்பெண்களைப் பாதிக்கக்கூடிய பிரச்சினையாக எண்டோமெட்ரியாசிஸ் உள்ளது. இதன் காரணமாக பல பெண்களுக்கு கர்ப்ப காலம் என்பது வெறும் கனவாகி விடுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
கருப்பையின் உட்சுவர்களில் பொதுவாகவும் சில பேருக்கு சினைப்பைகள், கருக்குழாய், குடல், மலக்குடல் பகுதிகள் மற்றும் சிறுநீர்ப்பையிலும் தோன்றக்கூடிய அதிகப்படியான தேவையற்ற திசுக்களின் வளர்ச்சியே இப்பிரச்சினைக்கு காரணம் ஆகும். ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படக்கூடிய இப்பிரச்சினையினால் மாதவிடாயின்போது இந்த அதிகப்படியான திசுக்களும் உதிரப்போக்குடன் சேர்ந்து வெளியாகும்.
சில நேரங்களில் இந்த திசுப்படலங்களில் ஏற்படும் ரத்தக்கசிவு கட்டியாகவும் மற்ற உறுப்புகளுடன் ஒட்டிக் கொள்ளக் கூடியதாகவும் ஆகி விடுகிறது. இதனால் மாதவிடாயின் போது அதிகப்படியான வலி ஏற்படுவதுடன், 25 முதல் 40 வயதில் உள்ள மூன்றில் ஒரு பங்கு பெண்கள் கருத்தரிக்க முடியாமைக்குக் காரணமாகவும் இருக்கிறது. திருமணமான பெண்கள் பல வருடங்களாகியும் கருத்தரிக்காமல், அதற்கான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளும் போதும், வேறு பிரச்சினைகளுக்காக சிகிச்சை எடுக்கும்போது இப்பிரச்சினை தெரிய வருகிறது.
கருப்பை அகப்படலமாக இருக்கும் பெண்களுக்கு பொதுவாக மாதவிடாய் காலத்தில் அதிக உதிரப் போக்கும் வலியும் இருக்கும். இத்திசுப்படலம், கருப்பை வாய், கருப்பையின் மேற்புறம் அல்லது பின்புறத்தில் இருந்தால் தாம்பத்திய உறவின்போது வலி இருக்கலாம். இந்தப் படலம் சினைப்பையிலோ, கருக்குழாயிலோ இருந்தால் கருத்தரிக்க முடியாமல் பாதிப்பை ஏற்படுத்தும். இதுவே குடல் பகுதியில் இருந்தால் சாப்பிட்டவுடன் வயிற்றுவலி, மலம் கழிக்கும்போது வலி மற்றும் குடல் அடைப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
வயது வந்த பெண் முதல் மெனோபாஸ் வயதுப் பெண் வரை யாருக்கும் எப்போது வேண்டுமானாலும் இந்தப் பிரச்சினை வரலாம். அம்மாவுக்கோ, உடன்பிறந்த சகோதரிகளுக்கோ இப்பிரச்சினை இருந்தால், சம்பந்தப்பட்ட பெண்களுக்கு கருப்பை அகப்படலம் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
குழந்தைப் பெற்றுக் கொள்வதில் தாமதம், அதிகமான உதிரப்போக்கு இருப்பது, 11 வயதிற்கு முன்பு பூப்பெய்வது, மாதந்தோறும் சீக்கிரமாக (27 நாட்களுக்கு குறைவான நாட்களில்) மாதவிடாய் வருவது, சிறு வயதிலேயே குழந்தை பெற்றுக்கொள்வது. உடல் எடை மிகக் குறைவாக இருப்பது, மதுப்பழக்கம் போன்றவையும் இப்பிரச்சினைக்கு காரணங்கள்.
ஹார்மோன் சிகிச்சை மற்றும் அறுவைசிகிச்சை மூலமாக இப்பிரச்னையைக் கட்டுப்படுத்தலாம். ஹார்மோன்கள், மாத்திரையாகவும், ஸ்பிரே மூலமாகவும் ஊசியாகவும் கொடுக்கப்படுகிறது. ஹார்மோன் சிகிச்சையை குழந்தை பெற்றுக் கொள்ளும் அவசியம் இல்லாதவர்களே எடுத்துக் கொள்ள முடியும். குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்து விட்டால் ஹார்மோன் சிகிச்சையை நிறுத்திவிட வேண்டும்.