இந்தியாவின் கேரள மாநிலத்தில் திருமணம் ஆகாத ஆணும், பெண்ணும் இணைந்துவாழ நீதிமன்றம் அனுமதி வழங்கியதுடன், பெண்ணின் தந்தையின் மனுவையும் தள்ளுபடி செய்துள்ளது.
18 வயது இளைஞரும், 19 வயது இளம்பெண்ணும் இணைந்து வாழ அனுமதி வழங்கிய கேரள நீதிமன்றம், திருமணம் ஆகாமல் இணைந்து வாழும் உறவு முறையில் நீதிமன்றம் கண்களை மூடிக்கொண்டு இருக்க முடியாது எனவும் கூறியுள்ளது.
வயது வந்த ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமலேயே சேர்ந்து வாழும் உரிமை உள்ளது மட்டுமின்றி திருமணம் செய்துகொள்வதற்கான தகுதியை எட்டாவிட்டாலும் கூட திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ உரிமை உள்ளது என கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.
கேரள மாநிலம் ஆலப்புழ மாவட்டத்தை சேர்ந்த இஸ்லாமிய ஜோடிகள் தொடர்பில் இளம்பெண்ணின் தந்தை ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து இளம் ஜோடியை பிரிக்க வேண்டும் என்று கேட்டிருந்தார். மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்ற அமர்வு, சமுதாயத்தின் மரபுசார்ந்த பிரிவினருக்கு ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தாலும், எல்லையை கொண்ட அரசியலமைப்பு நீதிமன்றம் வயது வந்த ஆணும், பெண்ணுக்குமான தடையற்ற உரிமைகளுக்கு மதிப்பளிக்கிறது என தெரிவித்துள்ளது.
மேலும் இளைஞருடன் இணைந்து வாழ இளம்பெண்ணுக்கு முழு சுதந்திரம் உள்ளது, இளைஞர் திருமண வயதை அடைந்த பின்னர் அவரை திருமணம் செய்துக்கொள்ளவும் உரிமை உள்ளது என நீதிமன்றம் மேலும் கூறியுள்ளது.