இந்தோனேசியா நாட்டுக்கு முதல் முறையாக அரசு முறை பயணமாக சென்றிருந்த இந்திய பிரதமர் மோடி, உற்பத்தி குறித்து அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோவுடன் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பில் இந்தியா மற்றும் இந்தோனேசியா இடையே 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
அதைத்தொடர்ந்து, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு மோடி செல்ல இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று மலேசியா சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் பிரதமர் மகாதிர் முகம்மதுவை சந்தித்து வாழ்த்து கூறினார். அதைத்தொடர்ந்து இருநாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
இதனிடையே மோடியின் வருகை குறித்து அறிந்த மலேசிய வாழ் தமிழ்மக்கள், ஸ்டெர்லைட் பிரச்னையை சுட்டிக்காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது ஸ்டெர்லைட்டை தடை செய், தமிழர்களை கொல்லாதே, தமிழ் மண்ணை சிதைக்காதே, மோடி எங்கள் எதிரி என்பது உள்ளிட்ட பதாகைகளை ஏந்தி கரகோஷம் எழுப்பினர்.
மலேசிய பயணத்தை முடித்துக்கொண்டு புறப்படும் மோடி, நாளை சிங்கப்பூரில் நடைபெற உள்ள பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டத்தில் உரையாற்ற உள்ளார்.