பிரதி சபாநாயகருக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் பெயர் பிரேரிக்கப் பட்டுள்ள நிலையில் அவருக்கு ஐக்கிய தேசியக் கட்சியும் ஆதரவு வழங்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
பிரதி சபாநாயகராகப் பதவி வகித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் திலங்க சுமதிபால, தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரித்திருந்தார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து, தீர்மானத்தை ஆதரித்த 16பேர் அரசிலிருந்து வெளியேறியிருந்தனர். அவர்களுடன் திலங்க சுமதிபாலவும் வெளியேறியமையால், பிரதி சபாநாயகர் பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டிருந்தது.
அந்த வெற்றிடத்துக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனை நியமிக்க, அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன பரிந்துரைத்திருந்தார். இது தொடர்பில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஆராயப்பட்டது.
பிரதி சபாநாயகர் பதவி அங்கஜனுக்கு வழங்கப்படுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் ஏற்கனவே எதிர்ப்பு வெளியிட்டிருந்தன. அரச தலைவரின் முடிவை மீள் பரிசீலனை செய்யுமாறு கோரப்பட்டிருந்தது.