ஆவாக் குழுவை வைத்துச் செய்வோம் என்று, வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு, வடமராட்சி கிழக்கில் வாடி அமைத்து கடலட்டை பிடிப்பில் ஈடுபடும் ஒருவர் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.
வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் கடலட்டை பிடிப்பது தொடர்பில் மருதங்கேணி பிரதேச செயலகத்தில் நேற்றுக் காலை கலந்துரையாடல் நடைபெற்றது. அதன் பின்னர் வாடி அமைத்திருந்த இடங்களுக்கு வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், கடற்தொழிலாளர் சங்கத்தினர், பொதுமக்கள் நேரடியாகச் சென்றனர்.
மாமுனைப் பகுதியில் வாடி அமைத்துள்ள ஒருவரே, வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தை மிரட்டியுள்ளார்.
இதேவேளை நாகர்கோவில் பகுதியில் வாடி அமைத்து கடலட்டை பிடிப்பில் ஈடுபடும், முஸ்லிம் ஒருவரிடம் சிவாஜிலிங்கம் பேச்சு நடத்தியபோது, வாடி அமைப்பதற்காக காணி உரிமையாளருக்கு 11 லட்சம் ரூபா கொடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
இதன்போது அங்கு நின்ற நாகர்கோவிலைச் சேர்ந்த காணி உரிமையாளர், வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தை நோக்கி, நீங்கள் என்ன சட்டநடவடிக்கை வேண்டுமானாலும் எடுங்கள். அதைப் பற்றிக் கவலையில்லை. உங்களால் செய்ய முடிந்ததைச் செய்யுங்கள் என்று சத்தம்போட்டார்.