வடக்கு மாகாணத்தில் அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனை தொடர்பான நடவடிக்கைகளைக் கண்காணித்து மாதாந்தம் அறிக்கையிடுமாறு வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கும் உத்த ரவு பிறப்பித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.
வடக்கில் அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனை மற்றும் கடத்தல்களைக் கட்டுப்படுத்துவதில் ஏற்பட்டுவரும் முன்னேற்றங்கள் தொடர்பாக ஆய்வு செய்யும் கூட்டம் ஒன்று சர்வமதத் தலைவர்களின் வேண்டுகோளுக்கு அமைவாகக் கடந்த மாதம் 31ஆம் திகதி வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தலைமையில் நடைபெற்றது.
சர்வமதத் தலைவர்கள், யாழ்ப்பாண மாநகர முதல்வர் இ.ஆனோல்ட், சிறப்பு அதிரடிப்படை அதிகாரி, பொலிஸ் உயர் அதிகாரிகள், கடற்படை அதிகாரிகள் மற்றும் கிராம அலுவலர்கள், பிரதேச செயலாளர்கள், மதுவரித்திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆளுநர் தெரிவித்ததாவது:அண்மைக் காலமாக மாணவர்கள் உட்படப் பொதுமக்களிடத்தில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுப்பதற்குச் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும். போதைப் பொருள் பாவனை தொடர்பில் அனைவரும் ஒன்றாகச் செயற்பட வேண்டும்.
இந்தச் செயற்பாட்டின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையைக் காலத்துக்குக் காலம் சமர்ப்பிக்க வேண்டும். மக்களிடமும், பாடசாலைகளிலும் இது தொடர்பான விழிப்புணர்வுகளை நடத்த வேண்டும். முறைப்பாடுகள் கிடைக்கும் பட்சத்தில் பொலிஸார் துரிதகதியில் செயற்பட்டுக் குற்றவாளிகளைச் சட்டத்தின்முன் நிறுத்த வேண்டும் – என்றார்.